வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (11/02/2018)

கடைசி தொடர்பு:16:00 (11/02/2018)

``ரவுடிகள் அராஜகத்துக்கு இவர்கள்தான் காரணம்!’’ - சீமான் குற்றச்சாட்டு

"அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையின் உதவியில்லாமல் ரவுடிகள்  செயல்பட முடியாது. ரவுடிகளின் அராஜகத்திற்கு இவர்கள் மட்டுமே காரணம்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்செந்தூரில் நடைபெற உள்ள  திருமுருக பெருவிழா பேரணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீமான், தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் ஒரு துறை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகள் நடந்து வருகின்றன. பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர் பணியிடங்களுக்குப் பணம் வாங்கியதாகக் குற்றம்சாட்டி, அவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அவரிடம் பணம் பெறப்பட்டுதான் துணைவேந்தர் பதவியே வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது, துணைவேந்தர் பணம் வாங்கினார் என குற்றம்சாட்டுவதில் என்ன உள்ளது?. 

72 ரவுடிகளைக் கைது செய்ததுதான் இந்த அரசின் சாதனை. ஒவ்வொரு நாளும் இந்த அரசு கடந்து போவதும் சாதனைதான். தமிழகத்தில் அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையின் உதவி இல்லாமல் ரவுடிகளால் செயல்பட முடியாது. ரவுடிகளின் அராஜகத்திற்கு இவர்கள் மட்டுமே காரணம். வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும், மன்னிப்பு கேட்கச் சொல்லி போராட்டம் நடத்துபவர்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். இது பொழுதுபோகாதவர்கள் செய்து வரும் போராட்டம். 840 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்காத இந்த அரசு, தமிழக மீனவர்களுக்காக எதையுமே செய்யாது. 

எங்களிடம் ஆட்சியை ஒப்படையுங்கள். இலங்கை மீனவர் பிரச்சினையை தீர்த்துக் காட்டுகிறோம். பட்ஜெட் விவாவத்தில், மக்களுக்கு என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பது குறித்து பேசாமல், நேரு சரியில்லை, காங்கிரஸ் சரியில்லை என பேசி பிரதமர் மோடி நேரத்தை வீணடித்துள்ளார்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க