`ராசிபுரம் தொகுதி முன்னாள் எம்.பி. கந்தசாமி உயிரிழப்பு!’

தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராசிபுரம் முன்னாள் எம்.பியுமான கந்தசாமி, வயதுமூப்பு காரணமாக சேலத்தில் இன்று (11.2.2018) உயிரிழந்தார். தமிழ் மாநிலக் காங்கிரஸின் மாநிலத் தலைவராக அவர் பதவி வகித்து வந்தார். அவருக்கு வயது 72. இது அரசியல் வட்டாரத்தில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கந்தசாமி குறித்து பேசிய தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ``கந்தசாமியின் மனைவி பெயர் குப்பம்மாள். இவர்களுக்கு காமராஜ் என்ற மகன் இருக்கிறார். கந்தசாமி குடும்பத்தோடு சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே மரவனேரியில் குடியிருந்து வருகிறார். இவர்10 ஆண்டுகளாக ஆஸ்துமா பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். மகனின் தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் இருந்ததால் மனதளவிலும் நலிவுற்று இருந்தார். இந்நிலையில், 72 வயதான கந்தசாமி இன்று காலை திடீரென மரணம் அடைந்தார். இது எங்கள் கட்சியைத் தாண்டி சேலத்தில் உள்ள மற்ற அரசியல் நிர்வாகிகளிடமும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கந்தசாமி ஆரம்ப காலத்தில் டி.வி.எஸ்., கம்பெனி புக்கிங் ஏஜென்ஸியில் கிளார்க் வேலை பார்த்தார். அதன் பிறகு நவசக்தி, தினமலர், பி.டி.ஐ., போன்ற செய்தி நிறுவனங்களில் வேலை செய்து வந்தார்.

ஆரம்பகால கட்டத்திலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சி பணியையும் ஆற்றி வந்தார். சேலம் மாவட்டம் தலைவாசல் தொகுதியில்1991 - 1996 போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மூப்பனாரோடு நெருங்கி பழகியதால் ராசிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 1996-ம் ஆண்டு முதல் 1998 வரை  எம்.பியாக இருந்தார். கடந்த 2001 முதல் 2006 வரை குன்னூர்  சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். தொடர்ந்து ஜி.கே.வாசனோடும் நெருங்கிய நட்போடு இருந்ததோடு, தமிழ் மாநில காங்கிரஸில் மாநில துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். சேலத்தில் அரசியல் கட்சியில் முதும் பெரும் தலைவராக இருந்து வந்தார்'' என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!