பணம் தர மறுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி -திருச்சி நிறுவனம் குற்றச்சாட்டு!

ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அவரது கணவரும் ரூ.43 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக திருச்சியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு வாணிக கழகத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருபவர் சுதாதேவி ஐ.ஏ.எஸ், இவரது கணவர் சதீஷ். ஐ.எப்.எஸ் அதிகாரி. அவர், திருச்சி மாவட்ட வன அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு தமிழக அரசின்  மூலம், சென்னை நெற்குன்றத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வீட்டைச் சீரமைத்து உள்கட்டமைப்பு வேலைகளைச் செய்ய திருச்சி தென்னூரில் உள்ள முகமது இப்ராஹிம் என்பவருக்குச் சொந்தமான டி-இன்டீரியர் அன்ட் பில்டர்ஸ் எனும் நிறுவனத்தை சதீஷ் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. 

அதன்பின்னர் நடந்தவற்றை முகமது இப்ராஹிமே விளக்குகிறார். அவர் கூறுகையில், ``அவர்களது அந்த வீட்டை சீரமைப்பதற்கான தோராய மதிப்பீடு பெற்றேன். அதன்படி ரூ.27 லட்சத்து 31 ஆயிரத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டாலும், அவர்கள் இருவரும் அரசுப்பணியில் இருப்பதால் ஒப்பந்தத்தை தவிர்த்து, நம்பிக்கையின் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வந்தேன். 

ஐ.ஏ.எஸ்  அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டுபணிகள் நடந்துகொண்டிருந்த போது, கூடுதலாக வீட்டின் உள்கட்டமைப்பு பணிகளை செய்ய சுதாதேவி ஐ.ஏ.எஸ்  மற்றும் அவரின் கணவர் சதீஷ் ஆகியோர் கூறினர். இதற்கு அதிக பணம் ஆகும் என்று கூறினேன். அதற்கு அவர்கள், வேலை முழுவதும் முடித்துவிட்டால் பணம் தருவதாக கூறினார்கள். அதன்படி முழுப்பணிகளை பணிகளை முடித்தேன். ஆனால் மொத்த செலவுத் தொகையான 43 லட்சத்து 50 ஆயிரத்து 481 ரூபாயைக் கேட்டபோது, பணம் தருவதாக இழுத்தடித்தார்கள். ஒருகட்டத்தில் ’உன்னால்  என்ன பண்ண  முடியும்?. பணம் தரமுடியாது’ என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.

இதுதொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் நீதிமன்றம், பணம் தரமறுக்கும் அதிகாரிகள் 2 பேர் மீதும் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யவும், அவர்கள் மீதா புகாரை விசாரித்து 15 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், போலீஸார் இதுவரை விசாரணை நடத்தாமலும், எனக்குச் சேர வேண்டிய பணத்தை வாங்கிக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன், நான் செலவிட்ட பணத்தை போலீசார் பெற்றுத்தர நீதித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். ஐ.ஏ.எஸ்  மற்றும் ஐ.எப்.எஸ் அதிகாரிகள்  மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிகாரிகள்  மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சுதாதேவி, இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. அந்த வீடு எனது பெயரில் இல்லை. எனது கணவருக்கு சொந்தமானது. இந்நிலையில் சம்பந்தமே இல்லாமல் எனதுப் பெயரை தொடர்புபடுத்தி கூறுவது உள்நோக்கத்துடன் கூடியது. அந்த வீட்டின் மதிப்பே சுமார் ரூ 40 லட்சம்தான் வரும். இப்படியிருக்க அந்த வீட்டுக்கு ரூ 43 லட்சத்தில் உள்கட்டமைப்பு பணிகள் செய்ததாக கூறுவது எந்தவிதத்திலும் பொருத்தமில்லாதது. நாங்கள் ரூ 43 லட்சம் தரவேண்டியதாக கூறும்  டி-இன்டீரியர் அன்ட் பில்டர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் முஹம்மது தாசின், எங்கள் வீட்டுக்கு வேலை செய்வதாக ஒப்புக்கொண்டார். ஆனால் பணிகளை பாதியிலேயே விட்டுட்டுச் சென்றுவிட்டார்.அதன்பிறகு பணிகளை வேறு நபர்கள் மூலம் செய்து முடித்துள்ளோம்.

இந்நிலையில்தான் அந்த நபர், எங்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் பத்திரிகை சந்திப்பு நடத்தி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை. நாங்கள் அவருடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!