தாமதிக்கும் விசாரணை தரப்பு... நீர்த்துப் போகிறதா அரியலூர் நந்தினி வழக்கு?

இறந்த நந்தினியின் வீடு

2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நிகழ்ந்த அந்தச் சம்பவம், ஜல்லிக்கட்டுப் போராட்டக் களேபரங்களுக்கு இடையேயும் மக்கள் அனைவரையும் உலுக்கியது. நந்தினி என்கிற 17வயது சிறுமியை அவளது காதலனே தனது நண்பர்களுடன் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து பிறகு கொன்று கிணற்றில் வீசியிருந்தான். டிசம்பர் மாதத்தின் இறுதியில் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த நந்தினி ஜனவரி மாதத்தில் ஊரே கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்த பொங்கல் விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கிணற்றில் வீசப்பட்டு உடல் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கிய பிணமாக எடுக்கப்பட்டார். 

நந்தினி இறந்துகிடந்த கிணறு

அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட அன்று இருந்த சூழலை விவரித்த ஊர் மக்களில் ஒருவர்,”  ,” நாங்கள் இந்த பகுதியில்தான் நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவோம். ஆனால் பொங்கலுக்கு முந்தைய வாரம் தொடங்கியே கிணற்றிலிருந்து நாற்றம் வரத் தொடங்கியிருந்தது. நாய்தான் செத்துப் போயிருக்கிறது என்று நினைத்திருந்தோம். திடீரென 17ம் தேதியன்று போலீசார் அந்த பகுதியில் குவிந்தார்கள். மக்களும் அந்த பகுதிக்கு விரைந்தார்கள். கயிறு கட்டி கட்டிலை கிணற்றுக்குள் இறக்கிய போலீசார் நந்தினியின் உடலை கிணற்றிலிருந்து மேலே எடுத்தார்கள். உடல் குப்புறக் கிடந்த நிலையிலேயே மேலே எடுத்துவரப்பட்டது. நீரில் முழுகியிருந்ததால் முதுக்குப்புறம் முழுதும் தோல் அழன்றுவந்துவிடும் நிலையில் இருந்தது. கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர்தான் முன்வந்து உடலைத் திருப்பிப் போட்டார். பிறப்புறுப்பில் புழு வந்துவிட்டிருந்தது. மார்பகங்களில் ஆயுதம் கொண்டு கீரியது போல் ரத்தம் ஒழுகிய நிலையில் காய்ந்திருந்தது. வாயில் உள்ளாடை திணிக்கப்பட்டிருந்தது. முகம் ஒன்றுமே தெரியாத அளவிற்கு உருவம் சிதைந்திருந்தது.இதனைப் பார்த்த மக்கள் அலறி அடித்து ஓடினார்கள். அங்கே சுற்றி இருந்த பெண் போலீஸ் அத்தனை பேரும் கதறி அழத் தொடங்கினார்கள். ஏதோ சிங்கம் ஒன்று வேட்டையாடியது போல இருந்தது உடல். நந்தினியின் பெரியம்மா மாரில் அடித்துக் கொண்டு சுற்றி இருந்த எல்லோரையும் பார்த்து “எம் பொண்ண இப்படி பண்ணிட்டீங்களேடா!” என்று கதறி அழுதது கண்ணுக்குள்ளேயே நிற்கிறது என்றார். நந்தினியின் தாய் ராஜக்கிளி முன்னர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் நந்தினியைக் காதலித்து ஏமாற்றிக் கொன்ற மணிகண்டனும்  அவரது குற்றத்துக்கு துணையாக இருந்ததாக அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.  ஆனால் ஓராண்டு ஆகியும் இந்தக் குற்றச் சம்பவம் தொடர்பாக முக்கியத் திருப்பங்கள் ஏதும் நிகழாமலேயே வழக்கு கிடப்பில் இருப்பதாக இந்த வழக்கினைத் தொடர்ந்து கவனித்து வரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துடைய  தமிழகத்தின் பொதுச் செயலாளர் சுகந்தி கூறுகிறார். 

வழக்கின் முதல் தகவலறிக்கை

அவர் கூறுகையில், “நந்தினியின் அம்மா ராஜக்கிளியின் கோரிக்கையின்படி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் தாங்களே அந்த வழக்கை சிறந்த முறையில் விசாரித்து வருவதாகக் கூறி அரியலூர் போலீசார் கூறிவந்தனர். இதற்கிடையில் அவர்களின் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டு அவர்கள் தற்போது சிறுகடம்பூரில் உள்ள நந்தினியின் வீட்டின் முன்பே மிக தைரியமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கில் ஒரு சாட்சியமான தேவி என்பவரையும் அவர் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இன்றும் இந்த வழக்கு தொடர்பான வலுவான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கூடவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கேள்வி வழி சாட்சி என்கிற அடிப்படையிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நேரடி சாட்சியமாக யாரையுமே போலீஸ் பதிவு செய்யவில்லை. இதனால் வழக்கு வலுவிழந்துவிடுமோ என்கிற அச்சம் ஒருபக்கம் இருக்கிறது” என்கிறார். 

ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிரளச்செய்த ஒரு உயிரிழப்பின் மீதான சரியான தீர்ப்பு கிடைக்குமா?. நந்தினியின் வலிகளுக்கான நியாயம் கிடைக்கப்பெறுமா?     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!