வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (11/02/2018)

கடைசி தொடர்பு:20:30 (11/02/2018)

``ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சி’’ - தி.மு.கவைத் தொடர்ந்து காங்கிரஸும் புறக்கணிப்பு

ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியைத் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். 


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் தமிழக சட்டப்பேரவையில் நாளை திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்துவைப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிகழ்ச்சியை தி.மு.க. புறக்கணிக்கும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  

இந்தநிலையில், தி.மு.கவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியைப் புறக்கணிக்கு என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப் படத்தை தமிழக சட்டமன்றத்தில் பேரவைத் தலைவர் திறந்துவைப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த முயற்சியை கைவிட வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழக சட்டமன்றத்தில் நாளை (12.2.2018) நடக்கவிருந்த ஜெயலலிதா உருவப்படத் திறப்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.