'ஜி.எஸ்.டி-யால் தொழில் துறைக்கு நெருக்கடி!' - கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் புகார்


 

திருப்பூர் தொழில் துறையினர் இடையேயான கலந்துரையாடல் கூட்டம், திருப்பூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, கேரள அரசின் நிதியமைச்சரும் மத்திய ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினருமான
தாமஸ் ஐசக் கலந்துகொண்டார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'நாடு முழுவதும் ஒரே வரி என்று கூறி, நாம் ஜி.எஸ்.டி-யை வரவேற்றோம். ஆனால், அதை அமல்படுத்தியதில்தான் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இன்று, நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளித்துறையிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. திருப்பூர் மாநகரைப் போல சூரத் மற்றும் லூதியானா போன்ற ஜவுளி நகரங்களும் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பு நீக்கத்தால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. தொழில்களே நடைபெற முடியாத அளவு அபாயகரமான சூழ்நிலை இங்குள்ளது. 

விரைவில் தராள வர்த்தக ஒப்பந்தம் வேறு வரவிருப்பதால், சிக்கல்கள் கூடும். இ-வே பில் விவகாரத்தில், மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும். வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே கொண்டுசெல்லப்படும் சரக்குகளுக்கு, இ-வே பில் அமல்படுத்தினாலும், ஒரு மாநிலத்துக்குள்ளேயே சரக்குகளைக் கையாள்வதற்கு இ-வே பில் விலக்கு அளிக்கப்பட வேண்டும். மேலும் இ - வே பில் விவகாரத்தில், அந்தந்த மாநில நிதியமைச்சர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஜி.எஸ்.டி மற்றும் இ-வே பில் போன்ற விவகாரங்களில், நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை ஒன்றிணைந்து, மத்திய அரசுக்கு  நெருக்கடி கொடுத்தால், நிச்சயம் ஒரு மாற்றத்தை நம்மால் உண்டாக்க முடியும்' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!