கோயிலை சந்தையாக மாற்ற அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? - பொன்.ராதாகிருஷ்ணன் கொந்தளிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், கடந்த 2-ம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்து சேதங்களை  மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் வந்து  பார்வையிட்டார்.  சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டு, சரியான விவரங்களைக் கூறாத கோயில் நிர்வாக ஊழியரிடம் அமைச்சர் கடுமையாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. 

கோயிலை சந்தையாக

ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தமிழகத்தில் கோயில்கள் தொடர்ந்து  பாதிப்புக்குள்ளாகிவருகின்றன. ஏற்கெனவே, திருச்செந்துரில் ஒரு சம்பவம் நடந்தது. மீனாட்சி அம்மன் கோயிலில் ஏறக்குறைய 20 கடைகள் சேதம் என அதிகாரிகள் சொல்லுகிறார்கள். 115 கடைகள் இங்கே உள்ளன. வசந்தராய மண்டபம் மேற்கூரை இடிந்துள்ளது. இப்பொழுதும் விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்னும் அப்பகுதியில் ஆபத்து உண்டு. முழுமையாக ஆய்வுசெய்திருப்பார்கள் என நம்புகிறேன். ஆயிரம்கால் மண்டபம் பாதிக்கப்பட்டிருந்தால், சங்க கால பொக்கிஷம்  பாதிக்கப்பட்டிருக்கும்.''

''கோயிலில் கடைகள் எதற்கு, இது என்ன மியூசியமா? எந்தக் காரணத்தைக்கொண்டும் இனி ஒரு கோயிலிலும் தனியாரும், அரசும் கடைகள் நடத்தக் கூடாது. இந்து ஆலயங்களைச் சந்தையாக மாற்ற வேண்டாம். இந்த உரிமையை யார் அரசுக்குக் தந்தது? இங்கே விளக்கு வாங்கி ஏற்றச்சொல்வது பக்தர்களை ஏமாற்றும் செயல். அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வரட்டும். தீ விபத்து விசாரணையை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும். இது விபத்து என மட்டும் நம்பிவிட முடியாது, முழுமையான விசாரணை வேண்டும்.  தீ பரவி நீண்ட நேரம் கழித்துதான் தீ அணைப்பு வாகனம் வந்துள்ளது. தீயை அணைக்க எந்தச் சாதனமும் இங்கே இல்லை'' என்றவரிடம் ''ஆறு மாதத்திற்குள் பணிகள் நிறைவுபெறும் என்று அரசு கூறியுள்ளதே'' என்ற கேள்விக்கு, ''நவீன உலகத்தில், 110 பிரிவு சட்டத்தைப் பயன்படுத்தி உடனே நிறைவேற்றிவிடுவார்கள் போல'' என்று கிண்டலடித்துவிட்டுச் சென்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!