Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்னும் 10 வருடத்தில் நாம் தமிழர் ஆட்சி! - சீமான் நம்பிக்கை

'நான், முப்பாட்டன் முருகனுக்கு காவடி தூக்குவதை மற்றவர்கள்  இழிவாகப் பேசிவருகிறார்கள். ஆனால் சிலர், பிரதமர் மோடிக்கு  காவடி தூக்கிவருவதை என்னவென்று சொல்வது? இன்னும் 10 வருடத்தில் நாம்தமிழர் கட்சிதான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் சீமான் பேசியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் நடந்த திருமுருகப் பெருவிழா பொதுக் கூட்டத்தில்  பேசிய சீமான்,  'பா.ஜ.க வேறு, ஆர்.எஸ்.எஸ் வேறு அல்ல; இரண்டுமே  ஒன்றுதான். அது போல, நாம் தமிழர் கட்சி என்பது வேறு, வீரத் தமிழர் முன்னணி வேறு அல்ல. மூவாயிரம் அல்ல... 50 ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி நம் தமிழ் மொழியே. எல்லா மொழிச் சொல்லுக்கும் விளக்கம் அளிக்கும் ஒரே மொழி தமிழ் மொழி மட்டும்தான்.  தமிழன் என்று சொல்வதில் நாம் ஒவ்வொருவரும் பெருமைகொள்ள வேண்டும். 

இந்து மதத்தையும் இந்தியாவையும் உருவாக்கியது வெள்ளைக்காரன்தான். 'இந்து' என்ற சொல், மதம் அல்ல.  நமது மதம் சைவம் மற்றும் வைணவம்தான். இனி,  நம் மதம் எது எனக் கேட்டால், வீர சைவம், வீர வைணவம் எனக் கூறுங்கள். எனவே, இனி நம் குழந்தைகளுக்கு இந்துமதி, இந்து எனப் பெயர் வைக்க வேண்டாம். ஆண் குழந்தையாக இருந்தால் 'சைவன்'  என்றும், பெண் குழந்தையாக இருந்தால்  'சைந்தவி' என்றும் பெயர் சூட்டுங்கள். அவரவர் குலதெய்வ வழிபாட்டில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  குலதெய்வம் மட்டுமே நம்  குலம் காக்கும். குலதெய்வங்கள் அனைத்தும் நம் குலத்தின் முன்னோடிகள்தான். 

முருக வழிபாடு மட்டும் அல்ல, ஐந்திணைகளில் உள்ள 5 நிலத்திற்கும் உரிய தெய்வங்களின்  வழிபாட்டையும் நாம் தமிழர்கட்சி இனி வரும் காலத்தில் கொண்டாடும். குருநானக் விழா, மகாவீரர் ஜெயந்தி என எல்லா தினத்திற்கும் விடுமுறை அளிக்கும் அரசு,  தைப்பூசத்திற்கு ஏன் இதுவரை விடுமுறை அளிக்கவில்லை. தமிழ்க்கடவுள் மட்டுமல்ல, தமிழ்ப் புலவரும்கூட தான் நம் முப்பாட்டன் முருகன். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும், தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளிக்கப்படும். தமிழராகப் பிறந்ததில் நாம் பெருமை கொள்ள வேண்டும். 

நான், என் முப்பாட்டன் முருகனுக்கு காவடி தூக்குவதை மற்றவர்கள் இழிவாகப் பேசுகிறார்கள். ஆனால், சிலர் மோடிக்கு காவடி தூக்கி வருவதை என்னவென்று சொல்வது? இன்னும் 10 ஆண்டுகளில் நாம்தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்போம்' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement