வெளியிடப்பட்ட நேரம்: 09:34 (12/02/2018)

கடைசி தொடர்பு:13:26 (12/02/2018)

``தீபாவை ஏமாற்றுவதற்காக என்னை நடிக்க வைத்தார் மாதவன்" - வீடியோ வெளியிட்ட போலி அதிகாரி #VikatanExclusive

தீபா, deepa

கடந்த 10-ம் தேதி காலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீடு பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது. போலீஸார், பத்திரிகையாளர்கள், கட்சிக்காரர்கள் எனப் பலரும் தீபாவின் வீட்டைச் சூழ்ந்திருந்தனர். ‘தீபாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்’ என்ற செய்தி பரவத்தொடங்கியது முதல் இந்த பரபர காட்சிகளும் அரங்கேறின. இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறிக்கொண்டு வந்த நபரை அங்கு இருந்தவர்களும் போலீஸாரும் விசாரிக்கத் தொடங்கியதும் அந்த நபர் பின்வழியாகத் தப்பிச் சென்றுவிட்டார். 

இதைத் தொடர்ந்து போலீஸாரும் தீவிரமாக விசாரணை நடத்தத் தொடங்கினர். இதற்கிடையில், தீபாவின் வீட்டில் இருந்து தப்பிச் சென்ற போலி அதிகாரி பிரபு, நேற்று இரவு மாம்பலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த விவகாரத்தில் பெரும் திருப்புமுனையாக, ‘என்னை சினிமா ஆசைகாட்டி வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்கச் சொன்னதே தீபாவின் கணவர் மாதவன்தான்’ எனத் தெரிவித்துள்ளார். ஏன் இந்த நாடகம்... இதன் பின்னணியில் என்ன நடந்தது. மாதவனுடனான பழக்கம்... தீபா ஏன் குறிவைக்கப்பட்டார் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் பிரபு. 

தீபா, deepa

அதில் பேசியுள்ள அவர், “என் பெயர் பிரபாகரன் என்ற பிரபு. விழுப்புரத்தைச் சேர்ந்த நான் பாண்டிச்சேரியில் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறேன். நான் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. நன்றாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கை, தீபாவின் கணவர் மாதவனைச் சந்தித்ததும் திசை மாறிவிட்டது. கடந்த நான்கு மாதத்துக்கும் முன்பு, தீபாவின் கணவர் மாதவன் எங்கள் ஹோட்டலுக்குச் சாப்பிட வந்தார். இவரை அடையாளம் கண்டதும் நன்றாகக் கவனித்துக்கொண்டோம். என்னுடன் பேசத் தொடங்கிய மாதவன், ‘ஆளு பார்க்க வாட்டசாட்டமாக நல்லா இருக்கீங்களே… எதாச்சும் படத்துல நடிக்கிறீங்களா’ எனக் கேட்டார். ‘இல்லை சார் அப்படி ஏதும் ஆசையில்லை’ என மறுத்துவிட்டேன். ‘நடிக்கணும்னா சொல்லுங்க. அடுத்த தடவை வரும்போது போட்டோ எடுத்து வையுங்க. சான்ஸ் வாங்கித் தர்றேன்’ எனச் சொல்லிவிட்டு கிளம்பினார். இதுபற்றி நான் வீட்டில் தெரிவிக்கவில்லை. மறுபடியும் இரண்டு மாதங்கள் கழித்து ஹோட்டலுக்கு வந்த மாதவன், ‘படத்தில் நடிக்கவைக்கிறேன்... போட்டோ கொடுங்க’ என்றார். என்னிடம் இருந்த ஒரு போட்டோவைக் கொடுத்தேன். சில நாள்களுக்கு முன்னர் என்னிடம் போனில் பேசிய மாதவன், ‘உனக்கு ஒரு கூரியர் அனுப்பறேன். ‘வருமான வரித்துறை அதிகாரி’னு ஐ.டி கார்டு இருக்கும். நீ இன்கம்டாக்ஸ் அதிகாரி மாதிரி நடிக்கணும். நான் சொல்றப்போ கிளம்பி வா’ எனச் சொன்னார். வாட்ஸ்அப்பில் இருந்துதான் கால் செய்வார். வேறு, வேறு நம்பர்களிலிருந்தும் கூப்பிடுவார்.

deepa, தீபா

சென்னையிலிருந்து வேறு பெயரில் எனக்கு ஒரு கூரியர் வந்து சேர்ந்தது. அதில், வருமான வரித்துறை அதிகாரி என்ற அடையாள அட்டை இருந்தது. பின்பு, போனில் அழைத்த மாதவன், ‘இப்போ சென்னைக்கு வருவீங்களா’ என்றார். ‘10-ம் தேதி ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வருவேன்' என்றேன். அப்போது, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு வரும்படி கூறினார். ‘வாசலில் செக்யூரிட்டி கேட்டால் வருமான வரித்துறை அதிகாரி எனச் சொல்லிவிட்டு ஐ.டி கார்டை காட்டு’ என்றார். எனக்கு சந்தேகம் வந்தது. ஆனால், பட வாய்ப்பு என நினைத்து அவர் சொன்னதை எல்லாமே செய்தேன். அவரிடம் இதுபற்றி கேட்டபோது, ‘படத்தோட கேரக்டருக்கு நீங்க செட் ஆவீங்களான்னு பாக்கறேன்’ என்றார். நான் வீட்டுக்கு உள்ளே போனபோது தீபா அங்கு இல்லை. மாதவனே போன் செய்து தீபாவை வரச்சொன்னார். தீபாவிடம் போனில் என்னை பேசச் சொல்லிய மாதவன் மிரட்டவும் சொன்னார். அதையும் செய்தேன். என் கையில் ஒரு ‘சர்ச் வாரன்ட்டை (search warrant)’ கொடுத்து ‘யாராவது கேட்டால் இதைக் காட்டுங்க’ என்றார்.

deepa, தீபா

எனக்குப் பயமாக இருந்தது. சற்று நேரத்தில் தீபா அனுப்பிய ஒரு வழக்கறிஞர் வந்தார். அவரிடம் என்னுடைய ஐ.டி கார்டு, வாரன்ட் எல்லாவற்றையும் காண்பித்தேன். மீடியா குவியத் தொடங்கியதும் ‘ஏதோ தவறு நடக்கிறது’ எனப் பயந்து வெளியேற முயன்றேன். அப்போது என்னிடம் வந்த மாதவன், ‘சந்துக்குள்ள சேர் போட்ருக்கேன்.. யாரும் பார்க்காதப்போ எகிறி குதிச்சு ஓடிடு’ என்றார். பதற்றத்தில் சுவர் தாண்டி ஓடி வந்துவிட்டேன். தன் மனைவியான தீபாவிடம் பணம் பறிப்பதற்காகவே இந்த நாடகத்தை மாதவன் நடத்தினார் எனப் பிறகுதான் புரிந்துகொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார் பிரபு என்கிற பிரபாகரன். 

பிரபு போலீஸில் சரணடைவதற்கு முன்பு, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாகப் பிரபுவின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவர் சரணடைந்த செய்தி வெளியாகத் தொடங்கியதும் தீபா மற்றும் மாதவனின் ஆதரவாளர்கள் மாம்பலம் காவல் நிலையத்தில் குவியத் தொடங்கிவிட்டனர். சரணடைந்துள்ள பிரபு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார். மேற்கொண்டு தீபா மற்றும் மாதவன் ஆகியோரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. 

 

 

 


டிரெண்டிங் @ விகடன்