'முப்போகம் விளைந்த பூமி இப்போது முள் காடுகளாகக் காட்சி'- கல்குவாரிகளுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி


'நீர்நிலைகளை ஆக்கிரமித்து தனியார் கல்குவாரிகள் அமைக்கப்பட்டிருப்பதால், நாங்கள் விவசாயம் பண்ண முடியவில்லை' என்று கதறுகின்றனர் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள்.

 புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கிராமம், இரும்பாளி. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராம  மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம் மட்டுமே. வயல்களை நம்பியே வாழ்க்கை நடத்திவந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் விவசாய நிலங்களில்தான் கண்விழிப்பார்கள். மேய்ச்சல் ஆடுகள். கறவை மாடுகள், உழவுக் காளைகள், முட்டையிடும் கோழிகள், சேவல்கள் என்று இரும்பாளி கிராம விவசாய மக்களின் வாழ்க்கை, மண்ணும் அதன் மணமும் சார்ந்து ரம்மியமாக இருந்திருக்கிறது. இதெல்லாம்  இப்போது பழங்கதையாகிவிட்டது.

இப்போது அந்தப் பகுதியில், கல்குவாரிகள் ஆதிக்கம்செலுத்தத் தொடங்கிவிட்டது. அதன்விளைவு, விசாயத்தை  இழந்து  வாழ்வாதாரத்தையும் தொலைத்து,வேலைதேடி வெளியூர்களுக்குச் செல்லும்  அவலம் இன்று இந்தக் கிராமத்தில் நிலவுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "100 ஏக்கர் பரப்பளவுகொண்ட இரும்பாளி கண்மாய்க்கு, வரத்துக்கால்வாய்கள்மூலம் தண்ணீர் நிரம்பும். கண்மாய் நிரம்பினால், கடல் போல காட்சிதரும். அந்தத் தண்ணீரைக் கொண்டுதான் முப்போகம் விவசாயம்செய்துவந்தோம். ஏழு வருடங்களுக்கு முன்பு, முகத்துவாரத்தை ஒட்டி தனியார் கல்குவாரி ஒன்று வந்தது. அதனைத் தொடர்ந்து சிறியதும் பெரியதுமாக வரிசையாக கல்குவாரிகள் வர ஆரம்பித்தன.

கண்மாயில் தண்ணீர் பெருகினால், குவாரிகள்அமைந்துள்ள இடங்களில்  தண்ணீர்  நிரம்பிவிடும். இதன்காரணமாக, குவாரிகள் பாதிப்புக்குள்ளாகிறது என அதன் உரிமையாளர்கள் கண்மாய்க்குத் தண்ணீர் வரும் பாதைகள்  அத்தனையையும் அடைத்து விட்டார்கள். இதனால்,  மழைத்தண்ணீர் கண்மாய்களுக்குச் செல்வதில்லை. இதனால், கடந்த ஏழு  ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் நாங்கள் யாரும் விவசாயம் செய்யாவில்லை.

இதைக் கண்டித்து, ஊர் மக்கள் ஒன்று திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தினோம். கம்யூனிஸ்ட், பா.ஜ.க போன்ற கட்சிகளும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. இதன் விளைவாக, கொஞ்ச நாள்களுக்கு அந்தக் குவாரிகள்  செயல்படாமல் இருந்தன. இப்போது மறுபடியும் செயல்பட ஆரம்பித்துவிட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனுக்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இனியாவது எங்களின் வாழ்வாதாரத்தைப்  பாதுகாக்க, அரசு நீர்நிலைகளை ஆக்கிரமித்து அமைக்கபட்டுள்ள கல்குவாரிகளை அப்புறப்படுத்தி, விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற தங்களது பல வருட கோரிக்கையுடன் முடித்தனர், இரும்பாளி கிராம மக்கள்.

இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடனிடம் பேசினோம். 'விவசாயத்தை மட்டுமே முதன்மைத் தொழிலாகக்கொண்ட ஊர், இரும்பாளி. அப்பகுதியை மெள்ள மெள்ள ஆக்கிரமிக்கத் தொடங்கிய கல்குவாரிகளால், தற்போது அங்கு விவசாயம்  பொய்த்துவிட்டது. விண்ணைப் பிளக்கும்  வெடிச்சத்தங்களோடு  மண்ணைப் பிளந்து பாறை வெட்டியெடுப்பதால், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவருகிறது. இதனால், முப்போகம்  விளைந்த பூமி இப்போது முள் காடுகளாகக் காட்சியளிக்கிறது. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். எங்கள் கட்சி சார்பில் ஆலங்குடியில் பிப்ரவரி 24,25 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கும் மாவட்ட மாநாட்டில், இரும்பாளி கிராமத்தின் நிலவரம்குறித்து தீர்மானம் இயற்ற இருக்கிறோம். அதன்பிறகு, எங்கள் கட்சியின் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தையும் நடத்த இருக்கிறோம்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!