சாலையில் பெண்ணை தரதரவென இழுத்துச்சென்ற கொள்ளையர்கள்! - சென்னையைப் பதறவைத்த சம்பவம்

சென்னையில்,  கொள்ளையர்கள் தொல்லை அதிகரித்துவிட்டன. அரும்பாக்கத்தில் நடந்த செயின் பறிப்புச் சம்பவத்தில்  நகையை விட்டுத்தராததால் பெண்ணைத் தர தரவென சாலையில் இழுத்துச்சென்ற கொடூரச் சம்பவம், பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி மேனகா, அரும்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, வள்ளுவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். 

சென்னையை அதிர வைத்த செயின் பறிப்புச் சம்பவம்

அப்போது, பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள், அவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளைப் பறிக்க முயன்றனர். ஆனால், செயினை விட்டுத்தராமல் மேனகா போராடினார். மேலும், செயினை இறுகப் பற்றிக்கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த கொள்ளையர்களில் ஒருவர், மேனகாவை செயினுடன் தரதரவென இழுத்துச்சென்றார். மேனகாவின் போராட்டமும் வீணானது. முடிவில் கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றுவிட்டனர். 

இந்தச் சம்பவத்தில், மேனகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், கோயம்பேடு காவல் நிலையத்தில் மேனகா புகார் அளித்தார். இந்தக் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. போலீஸார் வழக்குப்பதிவுசெய்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர். அதுபோல, குன்றத்தூரிலும் வயதான பெண்மணி ஒருவரிடம் பட்டப்பகலில் நகையைக் கொள்ளையர்கள் பறித்துச்சென்றனர். இந்தச் சம்பவமும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பட்டப்பகலில் இரண்டு பெண்களிடமும் நடந்த நகைபறிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, ரவுடிகளைப் பிடிக்க வேட்டை நடத்தியது போல கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!