சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம்! உயர் நீதிமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ., அவசர முறையீடு

சட்டப்பேரவையிலிருந்து ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ., அன்பழகன் முறையீடு செய்துள்ளார். மேலும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில்  ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு நீதிமன்றம்  4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. இதையடுத்து, அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க எம்.எல்.ஏ., சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்துவருகிறது.

இந்த நிலையில், 'தமிழக சட்டப்பேரவையில் வரும் 12-ம் தேதி (இன்று) ஜெயலலிதா படம் திறக்கப்படும்' என்று தமிழக அரசு நேற்று முன்தினம் திடீரென அறிவித்தது. அவசர அவசரமாக தமிழக அரசு அறிவித்துள்ளதோடு, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தைத் திறக்கக் கூடாது என்று திமுக, காங்கிரஸ், பா.ம.க உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பையும் மீறி, சட்டப்பேரவையில் இன்று காலை ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டது.

இதனிடையே, சட்டப்பேரவையிலிருந்து ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ., அன்பழகன் சார்பில் வழக்கறிஞர் வில்சன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு இன்று முறையீடுசெய்துள்ளார். அதில், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரிய வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது, சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார். 'மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்' என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்தது. இதையடுத்து, மனுவாக தி.மு.க தாக்கல்செய்துள்ளது. இந்த மனு, நாளை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!