Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`யாருக்காக நடந்தது டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு?' - தமிழக மாணவர்களைத் தவிக்க வைத்த வினாத்தாள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு

மிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் வி.ஏ.ஓ பதவி உள்பட 9,351 பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. `வடமாநிலத்தவர்கள் மட்டுமே பயன் அடையும் வகையில் வினாத்தாள் அமைந்துவிட்டது. மத்திய அரசின் திட்டங்கள்தான் இடம் பெற்றிருக்கிறதே தவிர, தமிழர் நாகரிகம், பண்பாடு குறித்தெல்லாம் எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை' எனக் குமுறுகின்றனர் கல்வியாளர்கள். 

ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் அறிவிக்கப்படும்போது, லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியானபோது, யாரும் எதிர்பாராத வகையில் 20,69,000 பேர் விண்ணப்பித்தனர். டி.என்.பி.எஸ்.சி வரலாற்றிலேயே இந்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு குவிந்தன. நேற்று நடந்த இந்தத் தேர்வில் 17,52,000 பேர் எழுதினர். கடந்த ஆண்டுகளைப்போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட தளத்தில் வினாத்தாள் அமைந்திருந்ததைத் தேர்வர்கள் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில், 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் குரூப் 4 தேர்வை எழுதினார்கள். இதில், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நடந்த குரூப் 4 தேர்வில் மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் பங்கேற்றனர். தமிழ் மொழி தெரியாத இவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதியுள்ளனர். வடமாநிலத்தவர்கள் திரண்டு வந்து தேர்வு எழுதியதைத் தமிழ் ஆர்வலர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "தமிழ்மொழியை அறியாத இவர்கள், வி.ஏ.ஓ உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். மாநிலத்தின் மொழிகளைப் பேசுபவர்களுக்கே அரசுப் பணிகளில் முக்கியத்துவம் தர வேண்டும். 'டி.என்.பி.எஸ்.சி விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' எனக் குரல் கொடுத்தும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. தமிழர்களைப் புறக்கணிக்கும் ஒன்றாகவே இதைப் பார்க்க முடிகிறது" என்கின்றனர் வேதனையோடு. 
 
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி"அரசுப் பணி கனவுடன் குரூப் 4 தேர்வுக்குத் தயாராகிவந்த லட்சக்கணக்கான கிராமத்து இளைஞர்களை வஞ்சித்திருக்கிறது தேர்வாணையம். தமிழக அரசுத் துறைகளில், தமிழ்நாட்டில் இருக்கும் பணிகளுக்கான போட்டித்தேர்வில், தமிழ்நாடு பற்றிய கேள்விகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்திய சுதந்திரப் போராட்டம் (இந்திய விடுதலை இயக்கம்) தொடர்பாக ஒரு வினாகூட இல்லை. அறிவுத் திறன் (aptitude test) பகுதியில், கணிதப் பாடத்துக்கு வெளியே கேள்விகளே இடம்பெறவில்லை. இவற்றையெல்லாம்விடக் கொடுமை, தமிழக வரலாறு, தமிழர் நாகரிகம், தமிழர் கலைகள், பண்பாட்டு சின்னங்கள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை. தமிழக ஆறுகள், வளங்கள், தொழில்கள், தமிழ்நாட்டுப் பிரச்னைகள் பற்றிய எந்த வினாவும் இல்லை. கிராம நிர்வாக அலுவலர் பணிக்கும் சேர்த்துதான் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கிராமப்புற நிர்வாகம் பற்றிய கேள்விகளும் கேட்கப்படவில்லை" என வேதனையோடு பேசுகிறார் கல்வியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. தொடர்ந்து நம்மிடம் விவரித்தார். 

"இந்தத் தேர்வில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தாலும் அதிர்ச்சியே மிஞ்சுகிறது. 'இந்தியா - மாலத்தீவு இடையிலான ராணுவ ஒத்திகைக்கு என்ன பெயர்' ; 'இந்திய விமானப்படையிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஊர்தியின் பெயர் என்ன' ; '2017 அக்டோபரில் டெல்லியில் தொடங்கப்பட்ட நிறுவனம் எது' இத்துடன், பல்வேறு யோஜனாக்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டுகள் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இந்த வினாத்தாளை அப்படியே அச்சுப் பிசகாமல் ஏதேனும் ஒரு வட இந்திய மாநிலத்தில், வினாத்தாளாக வைத்திருந்தால் மதிப்பெண்களை அள்ளியிருப்பார்கள். அரசு நிர்வாகத்துக்கு யார் வர வேண்டும் என்பதைவிடவும் யார் வரக் கூடாது என்பதை மனதில் வைத்தே வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத்தான் தெரிகின்றன. அறிவியல், கணிதப் பகுதிகளில் நேரடியாகப் பள்ளிப் புத்தகங்களிலிருந்து வந்த வினாக்கள் மட்டும்தான் சற்று ஆறுதலை அளித்துள்ளன. ஆனால், பொது அறிவுப் பகுதியைக் கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத அளவுக்குக் கேள்விகள் வந்துள்ளன. 

 

 

குறிப்பாக, முதல் தலைமுறைப் பட்டதாரி இளைஞர்களை, அரசுப்பணிப் பக்கம் வரவிடாமல் விரட்டுகின்ற முயற்சியாகவே பார்க்க முடிகிறது. மிக நன்றாகத் திட்டமிட்டுத் துல்லியமாகத் தேர்வு நடத்துவதில் அபாரமான நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ள தேர்வாணையம், வினாத்தாள் அமைப்பதில் இந்த அளவுக்குச் சறுக்கியது ஏன். இப்படியொரு வினாத்தாளை வடிவமைத்தன் மூலம், தமிழக கிராமப்புற இளைஞர்களுக்கு மிகப் பெரிய அநீதி இழைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. பொதுப் பாடப் பகுதியில் மட்டுமல்ல; மொழித் தாளிலும்கூட, ஒருவிதத் தவறான அணுகுமுறை தெரிகிறது. விடையை நோக்கி இட்டுச் செல்வதாக வினா அமைய வேண்டும் என்பது பொது விதி. ஆனால், சில வினாக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் (the structuring of the question) நகைப்புக்கு உரியதாக இருக்கிறது. நடப்பு நிகழ்வுகள் பகுதியில், நாம் அதிகம் அறிந்திராத, தமிழ் நாளிதழ்களில் அதிகம் இடம் பெறாத செய்திகளைத் ‘தேடித் தேடி’  கேட்டிருக்கிறார்கள். ஏன் இந்த அநீதிப் போக்கு. நகர்ப்புற இளைஞர்களில் யாருக்கெல்லாம் இணையம் வழியாகச் செய்திகளை வாசிக்கின்ற வழக்கம் இருக்கிறதோ அவர்களால் மட்டுமே சில வினாக்களுக்கு விடை அளிக்க முடியும். ஒவ்வொரு வினாவும் அது வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தையும் முழுமையாகப் பார்த்தால், கிராமத்து இளைஞர்கள் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியும்" என்றார் வேதனையோடு.
 

பொதுத்தேர்வில் எளிதாக ஸ்கோர் அடிக்க  சில டிப்ஸ்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement