துப்பாக்கி சத்தத்துக்கிடையே குழந்தையைப் பெற்றெடுத்த ராணுவ வீரரின் மனைவி!

ம்மு-காஷ்மீரில், சுஞ்சுவான் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மற்றும் குடியிருப்புப் பகுதிக்குள், பிப்ரவரி 9-ம் தேதி அதிகாலை ஆயுதங்களுடன் நுழைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள், அங்கிருந்த ராணுவ வீரர்கள்மீது ஏ.கே 56 துப்பாக்கி கொண்டு சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படை வீரர்கள் பதிலடிகொடுத்ததில், தாக்குதலில் ஈடுபட்ட  தீவிரவாதிகள் இறந்தனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர் நஷீர் அகமது என்பவரின் மனைவி ஷாஷ்தா ஆகியோர் காயமடைந்தனர். ஷாஷ்தா நிறைமாத கர்ப்பிணி. அவரின் தொடைப் பகுதியில் குண்டு பாய்ந்து முகாமுக்குள் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். ராணுவ வீரர்கள் அவரை மீட்டு, சாத்வாரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்து, குழந்தையை வெளியே எடுத்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். 

குழந்தை பெற்றெடுத்த ராணுவ வீரரின் மனைவி

தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர்கள்  5 பேர் கொல்லப்பட்டனர். 5 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். அதில், 14 வயது சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. சிறுவனின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடிவருகின்றனர். தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடத்திய கியாரி முஸ்டாக், முகமது ஆதில், முகமது காலீத் கான் ஆகிய 3 பேருமே பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். தாக்குதல் நடத்துவதற்கு ஒரு நாளுக்கு முன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக ஜம்முவுக்குள் நுழைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த 2001-ம் ஆண்டு, நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குரு, பிப்ரவரி 9-ம் தேதிதான்  தூக்கிலிடப்பட்டார். அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி பழிவாங்கும் விதத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த தீவிரவாத எதிர்ப்பு விசாரணை ஏஜென்ஸி, தேசியப் புலனாய்வு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் காஷ்மீர் சென்றுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!