ஜெயலலிதா படத்தால் சட்டப் பேரவையின் புனிதம் கெட்டுவிட்டது' -ராமதாஸ் காட்டம்

டாக்டர்.ராமதாஸ்

"சட்டப் பேரவையில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதா படத்தைத் திறந்திருப்பதால் சட்டப் பேரவையின் புனிதம் கெட்டுவிட்டது. உடனடியாக ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும்" என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்டப் பொதுக்குழு கூட்டம் இன்றைக்கு ஈரோட்டில் நடக்கவிருக்கிறது. அதில் கலந்துகொள்வதற்காக ஈரோட்டிற்கு வருகை தந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ் முன்னதாகப் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது, "சட்டப் பேரவையில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதா படத்தை திறக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் பலரும் சொல்லிவந்த நிலையில், மிக அவசர அவசரமாகப் பேரவைத் தலைவர், ஊழல் குற்றவாளி ஜெயலலிதா படத்தைத் திறந்திருக்கிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதற்காக  இரண்டு முறை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்தான் ஜெயலலிதா. ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்திருந்தால் பெங்களூரிலுள்ள பரப்பன அக்ரஹார சிறையில்தான் இருந்திருப்பார். அப்படி ஊழலின் மொத்த உருவமாக இருந்த ஜெயலலிதாவின் படத்தை சட்டப் பேரவையில் திறந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சட்டப்பேரவையில் காந்தி, அம்பேத்கர், பெரியார், ராஜாஜி, திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, காயிதே மில்லத், முத்துராமலிங்கத் தேவர், எம்.ஜி.ஆர் போன்றவர்களின் 10 படங்களை ஏற்கெனவே திறந்திருக்கிறார்கள். பொதுவாகக் குடியரசுத் தலைவர், பிரதமர் அல்லது வெளிமாநில  ஆளுநரைக் கொண்டுதான் இத்தகைய படங்கள் திறக்கப்படுவது வழக்கம்.  அப்படியிருக்க சட்டப்பேரவைத் தலைவர், ஜெயலலிதா படத்தை அவசர அவசரமாகத் திறந்திருக்கிறார். இதனால், சட்டப் பேரவையின் புனிதம் கெட்டுவிட்டது. காந்தி, அம்பேத்கர் போன்ற  தலைவர்களுக்கு மத்தியில் ஜெயலலிதா படம் இருப்பது அந்தத் தலைவர்களை அவமதிக்கும் செயலாகும். உடனடியாக ஜெயலலிதா படத்தை அகற்றவேண்டும். இல்லையென்றால், மற்ற தலைவர்களின் உருவப் படங்கள் சட்டப் பேரவையில் இருக்கக் கூடாது" எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!