காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு.. தவிப்பில் கோவை அச்சக ஊழியர்கள்! | Coimbatore Central government press employees didn't allowed to work even after court order

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (12/02/2018)

கடைசி தொடர்பு:17:10 (12/02/2018)

காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு.. தவிப்பில் கோவை அச்சக ஊழியர்கள்!

கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகம், சுமார் 132 ஏக்கரில் கடந்த 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இலக்கை பூர்த்திசெய்து, ரூ.1.5 கோடி லாபம் ஈட்டிவருகிறது.

அச்சகம்

‌இந்நிலையில், நாட்டிலுள்ள 17 அச்சகங்களை ஐந்து ஆகக் குறைக்க, மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவு செய்தது. அதன்படி, கோவை, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இயங்கிவரும் அச்சகங்கள் மூடப்பட்டு, அவற்றின் பணிகள் நாசிக்கில் உள்ள அச்சகத்தோடு இணைக்க மத்திய அமைச்சரவை முடிவுசெய்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இதையடுத்து, கோவை அச்சகத்தை மூடக் கூடாது என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

இதனிடையே கடந்த மாதம் 15-ம் தேதியுடன், கோவை அச்சகம் மூடப்பட்டது. மேலும், அச்சகத்தில் பணிபுரிந்துவந்த ஊழியர்களையும், நாசிக்கில் உள்ள அச்சகத்தில் பணியில் சேர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அச்சக ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கோவை அச்சகத்தை மூட இடைக்கால தடை விதித்தது. மேலும், இது தொடர்பாக நான்கு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், அதுவரை ஊழியர்களை டிரான்ஸ்பர் செய்யவும் தடைவிதிக்கப்பட்டது. இதனால் அச்சக ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், தீர்ப்பு வெளியாகி 10 நாள்களுக்கு மேல் ஆகியும், ஊழியர்களுக்குப் பணிகளை ஒதுக்க மறுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அச்சக ஊழியர்கள் கூறுகையில், " நீதிமன்ற உத்தரவு நகலை, அன்றைய தினமே எங்களது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டோம். ஒரு சில நாள்களில், ரீ-ஜாய்னிங் ஆர்டர் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், தற்போதுவரை எங்களது தலைமை அலுவலகத்திடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. இதனால் இங்குள்ள மேனேஜர் எங்களுக்குப் பணி ஒதுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தடையை மீறி இன்று அலுவலகத்துக்குள் நுழைந்து கையெழுத்துப் போட்டுவிட்டோம். நீதிமன்றம் உத்தரவிட்டும், நாங்கள் பணி செய்ய முடியாத நிலையே நிலவுகிறது" என்றனர்.