மிஸ் இந்தியா போட்டி பட்டியலில் மூன்று தமிழகப் பெண்கள்!

மாடலிங் உலகில் இருக்கும் பெண்களுக்கு அழகிப்போட்டியில் கலந்துகொண்டு மகுடம் சூட வேண்டும் என்பதே கனவாகவும், லட்சியமாகவும் இருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல், ஒவ்வொரு வருடமும் இந்திய அழகி, உலக அழகி, பிரபஞ்ச அழகி என பல கேட்டகிரிகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் இருந்து, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, யுக்தா முகி, மனுஷி சில்லர் ஆகியோர் உலக அழகி பட்டமும், லாரா தத்தா, சுஷ்மிதா சென் ஆகியோர் பிரபஞ்ச அழகி பட்டமும் பெற்றுள்ளனர். இவர்களை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு ஒவ்வொருத்தரும் மாடலிங் துறையில் அடியெடுத்து வைக்கின்றனர். 

மிஸ் இந்தியா

அந்த வகையில், 55-வது 'ஃபெமினா மிஸ் இந்தியா' நிகழ்வு வரும் ஜூன் மாதம் நடக்க இருக்கிறது. மிஸ் இந்தியா அமைப்போடு இணைந்து இந்தியாவின் பெருமைமிகு மிஸ் இந்தியாவைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக  ஸ்பான்சர் செய்து வருகிறது இந்தியாவின் ஃபேஷன் மையமாக விளங்கும் ஃஎப்.பி.பி (FBB). மிஸ் இந்தியா தமிழ்நாடு, மிஸ் இந்தியா ஆந்திரப் பிரதேசம், மிஸ் இந்தியா கர்நாடகம், மிஸ் இந்தியா கேரளா, மிஸ் இந்தியா தெலுங்கானா என ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா மூன்று பேர் பெங்களூரில் வரும் பிப்ரவரி 24-ம் தேதி கிரவுண் பிளாஸாவில் நடக்கும் தென் மண்டல கிரீடம் சூட்டும் விழாவில் கலந்துகொள்வார்கள். 

அதற்குத் தமிழகம் சார்பில் மூன்று அழகிகளைத் தேர்வு செய்யும் அலங்கார அணிவகுப்பு சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் உள்ள பிக் பஜாரில் நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் தமிழ்நாட்டைச் சார்ந்த 80-க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆடிஷனை '2017 மிஸ் இந்தியா தமிழ்நாடு' பட்டம் வென்ற ஷெர்லின் சேத் நடுவராக இருந்து நடத்தினார். ரசிகர்கள் மத்தியில் நடந்த இந்த அலங்கார அணிவகுப்புக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. கலந்துகொண்ட 80-க்கும் மேற்பட்டவர்களில், ஈஷா கோஹில், மதிஷா ஷர்மா, அனுகீர்த்தி வாஸ் ஆகிய மூன்று அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் பெங்களூரில் நடக்கும் தென் மண்டலத்திற்கான  அடுத்தகட்ட தேர்வில் தமிழ்நாடு சார்பாகக் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

மிஸ் இந்தியா

அந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படும் அழகிகளுக்கு, மாடலிங் துறையில் இருந்து சிறந்த நிபுணர்களைக் கொண்டு தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு, ஜூன் மாதம் மும்பையில் நடக்க இருக்கும் மிஸ் இந்தியா இறுதிப்போட்டியில் பங்குபெறச் செய்வார்கள். ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு வழிகாட்டி அந்த அழகிகளுக்கு உதவியாக இருப்பார். அந்த வகையில், தென் மண்டலத்துக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் வழிகாட்டியாகப் பொறுப்பேற்றிருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டது அந்த அமைப்பு.  கடந்த ஆண்டு நடந்த ஆடிஷனில் ஹரியானா மாநிலம் சார்பாகக் கலந்துகொண்ட மனுஷி சில்லர் 'மிஸ் இந்தியா 2017' பட்டத்தை தட்டிச் சென்றது மட்டுமல்லாமல் 'உலக அழகி 2017' பட்டத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!