வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (12/02/2018)

கடைசி தொடர்பு:18:30 (12/02/2018)

கின்னஸ் சாதனைக்காக 10 மணி நேரம் பந்துவீசிய கல்லூரி மாணவர்!

நெல்லையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் 10 மணி நேரம் பந்துவீசி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் உற்சாகம் அளித்தனர்.

கின்னஸ் சாதனை முயற்சி

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வரலாறு படித்து வரும் மாணவர், செந்தில்வேல் குமார். திசையன்விளையைச் சேர்ந்த அவர் கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்பாக அதீத ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைக்கும் நோக்கில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்த அவர், தொடர்ந்து 10 மணி நேரத்துக்கு கிரிக்கெட் பந்து வீசும் முயற்சியில் ஈடுபட்டார். 

இடது கையைக் கட்டிக்கொண்டு பந்துவீச்சைக் காலை 7.20 மணிக்குத் தொடங்கிய இந்தச் சாதனை முயற்சியை கல்லூரி முதல்வர் முகமது சாதிக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். உலக சாதனை முயற்சியாக அவர் மேற்கொண்ட இந்தப் பந்துவீச்சை, மெடல் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற அமைப்பின் ஆய்வாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் இந்தச் சாதனை முயற்சி நடைபெற்றது. 

இந்தச் சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவர் செந்தில்வேல் குமார், ஒரு மணிநேரப் பந்து வீச்சுக்கு இரண்டு நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் தொடர்ந்து பந்து வீசினார். 10 மணி நேர பந்து வீச்சு சாதனை முயற்சியில் ஈடுபட்ட அவரை சக மாணவ மாணவிகள் உற்சாகப்படுத்தினர். மாலை 5.20 மணிக்குப் பின்னர் அவர் பந்துவீசுவதை நிறுத்தினார். மாணவரின் சாதனையை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்த பின்னர், அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. 

மாணவர் செந்தில்வேல் குமார்

இதுபற்றி மாணவர் செந்தில்வேல் குமார் கூறுகையில், ’’கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவனான நான் கிரிக்கெட் விளையாட்டில் கொண்ட ஆர்வம் காரணமாக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். வேறு எவரும் இதுபோன்ற முயற்சியில் இதுவரை ஈடுபடவில்லை. முதன்முறையாக நான் இந்த முயற்சியில் ஈடுபட்டு இருப்பதால், நிச்சயமாக கின்னஸ் சாதனை படைக்க முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் உற்சாகம் காரணமாகவே இந்தச் சாதனை முயற்சியைச் செய்ய முடிந்தது. சக மாணவர்கள் எனக்கு மிகுந்த ஆதரவையும் உற்சாகத்தையும் அளித்தது மறக்க முடியாதது’’ என்றார். 

இந்தச் சாதனை முயற்சியை ஆய்வு செய்யும் அலுவலர்கள் கூறுகையில், ‘இந்த முயற்சியில் ஈடுபட்ட மாணவரின் பந்துவீச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அவரது பந்துவீச்சின் திறன், ஒருமணி நேரத்தில் எத்தனை பந்துகளை வீசினார்? இடையில் எவ்வளவு நேரம் ஓய்வு எடுத்தார்? போன்றவற்றையும் கவனத்தில்கொண்டு அவரது சாதனையை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்போம். அவர்கள் இறுதி முடிவெடுத்து சாதனையை அங்கீகரிப்பார்கள்’’ என்று தெரிவித்தனர்.