துணைவேந்தர் கணபதிக்கு 4 நாள்கள் போலீஸ் காவல்! கோவை நீதிமன்றம் உத்தரவு

உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதியை 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், வேதியியல் துறை உதவிப் பேராசிரியராக இருப்பவர் சுரேஷ். இவர் கடந்த 2016-ம் ஆண்டு, உதவிப் பேராசிரியராகப் பணி நியமனம் செய்யப்பட்டார். சுரேஷைப் பணி நிரந்தரம் செய்வதற்காகத் துணைவேந்தர் கணபதி, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சுரேஷ் புகார் அளித்தார். சுரேஷிடமிருந்து  துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெறும்போது அவரைக் கையும் களவுமாகப் பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில், கணபதியை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 9-ம் தேதி மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜான் மினோ முன்னிலையில் இன்று (12.2.2018) விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸிடம் இதுதொடர்பான விவரங்களை ஏற்கெனவே கூறிவிட்டதாகக் கூறி போலீஸ் விசாரணைக்கு கணபதித் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கணபதியை 4 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். கணபதியிடம், வரும் 16-ம் தேதி மாலை 6.30 மணி வரை போலீஸார் விசாரணை நடத்தலாம். அதேபோல், சிறையில் சிறப்பு முதல் வகுப்பு அளிக்க வேண்டும் என்று கோரி கணபதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை (13.2.2018) விசாரணைக்கு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!