ரூ.150 கோடிக்காக மாற்றப்பட்ட விதிமுறைகள்!? - சுகாதாரத்துறையை வட்டமிடும் புகார்

தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம் புராஜக்ட்

மிழக சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் சில அதிகாரிகள். ' மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படும் திட்டங்களில் தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை, அமைச்சர் அலுவலக ஆட்கள் கொண்டு வந்துள்ளனர். மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் 150 கோடி ரூபாய் டெண்டரில், தங்களுக்கு வேண்டப்பட்ட கம்பெனிகளே வரும் அளவுக்கு விதிகளில் மாற்றம் செய்துள்ளனர்' என்கின்றனர் அரசு ஒப்பந்ததாரர்கள். 

மதுரை மண்டல இ.எஸ்.ஐ மருத்துவமனையின் மருந்து, மாத்திரைகள் சேமிப்பு மைய அலுவலராகப் பணிபுரியும் கல்யாணி என்பவர், கடந்த வாரம் மதுரை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், ' எனது அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 63 இ.எஸ்.ஐ மருந்தகங்கள் உள்ளன. இந்த மருந்தகங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் குறித்து ஒவ்வொரு நிதி ஆண்டும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த நிதி ஆண்டுக்கு ரூ.13 கோடியே 12 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் தேவை என அறிக்கை அளித்தேன். அதே நேரத்தில், உயர் அதிகாரிகளால் ரூ.36 கோடி ரூபாய்க்கு மருந்து, மாத்திரைகள் தேவை என அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த முரண்பாடு குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், எனது அறிக்கை சரியானது என உறுதி செய்யப்பட்டது. இதனால் என்னைப் பழிவாங்க முடிவுசெய்து, தத்தனேரி இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு இடமாறுதல் செய்தனர். இதனால், எனது பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார். நீதிமன்றத்தின் விசாரணைக்குப்பின், கல்யாணிக்கு விதிக்கப்பட்ட இடமாறுதலுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன். 

அமைச்சர் விஜயபாஸ்கர்" மதுரை மண்டல இ.எஸ்.ஐ அதிகாரி தாக்கல் செய்த மனு என்பது ஒரு மண்டலத்துக்கான பணிகள்தான். இதே நிலைதான் அனைத்து மண்டலங்களிலும் நிலவுகிறது. 'தங்களுக்கு வேண்டியவர்களுக்கே ஒப்பந்தப் பணிகள் சென்றடைய வேண்டும்' என்பதில் சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகம் உறுதியாக உள்ளது. இதைத் தாண்டி அரசு ஒப்பந்ததாரர்களால் எதையும் செய்ய முடிவதில்லை" என ஆதங்கத்தோடு பேசினார் மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் அதிகாரி ஒருவர், " அரசு மருத்துவமனைகளுக்கு என்னென்ன மருத்துவ உபகரணங்கள் தேவை என்பதை, மருத்துவக் கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநர் தலைமையிலான குழு ஆய்வு செய்கிறது.

இந்தத் தகவலை தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம் புரொஜக்ட்டுக்கு (TNHS) அனுப்பி வைக்கின்றனர். அவர்கள், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்துக்கு விவரத்தை அனுப்பி வைக்கின்றனர். உலக வங்கி மற்றும் தமிழக அரசின் நிதி பங்களிப்போடு டி.என்.ஹெச்.எஸ் அமைப்பு செயல்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு 300 கோடியிலிருந்து 500 கோடி ரூபாய் வரையில் நிதி ஒதுக்கப்படுகிறது. தற்போது மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவரும் திட்ட இயக்குநர் ஒருவரும் மிகச் சரியாக செயல்படுகின்றனர். இவர்களிடம் அமைச்சர் அலுவலக ஆள்களின் வேலை எடுபடுவதில்லை. இதனையடுத்து, மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் பொது மேலாளர் பணியிடத்துக்கு தங்களுக்கு வேண்டிய பெண் அதிகாரி ஒருவரைக் கொண்டு வந்துள்ளனர். இவர் மூலமாக, உயர் அதிகாரிக்குத் தெரியாமலேயே சில விஷயங்கள் நடந்து வருகின்றன. அதேபோல், ஹெல்த் சிஸ்டம் புரொஜக்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகப் பொறுப்புக்கும் தங்களுக்கு வேண்டிய பெண் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளனர். 

' இதனால் எந்த கம்பெனிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும்' என்பதை முன்னரே இவர்கள் தீர்மானித்துவிடுகின்றனர். இவர்கள் தயாரிக்கும் அறிக்கையின் மீது பெரிதாக எந்தக் குறிப்பும் எழுத முடியாத அளவுக்கு ஆவணங்களைத் தயாரிக்கின்றனர். வரும் மார்ச் மாதம் 150 கோடி ரூபாய் அளவுக்குச் செயற்கை சுவாசக் கருவி, லேப்ராஸ்கோப்பி, ஸ்கேன்(சி.டி, எம்.ஆர்,ஐ, அல்ட்ரா சவுண்ட்) ஆகியவற்றை வாங்க உள்ளனர். இதில் எந்த கம்பெனிகளுக்கு ஆர்டர் போய்ச் சேர வேண்டும் என்பதையும் முடிவு செய்துவிட்டனர். 150 கோடிக்கான டெண்டரில் முறைப்படி ஊழல் செய்ய உள்ளனர். சென்னை, மைசூர், மும்பை உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கம்பெனிகள் இந்த டெண்டரில் பங்கெடுக்க உள்ளன.

ரவீந்திரநாத்ஹெல்த் சிஸ்டம் புரொஜக்ட்டில் உள்ள அதிகாரியை மாற்றல் செய்துவிட்டு, டெண்டர் வெளிப்படையாக நடத்துவதற்கு சுகாதாரத்துறை செயலர் ஆவன செய்ய வேண்டும். கோவை பாரதியார் பல்கலைக்கழக ஊழலைக் களையெடுத்ததுபோல, சுகாதாரத்துறையிலும் ஆளுநர் அலுவலகம் தலையிட வேண்டும்" என்றவர், " பொதுமக்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய வகையில், மண்டலவாரியாக ரத்த பரிசோதனைக் கூடங்களை சுகாதாரத்துறை ஏற்படுத்தியது. ஏழு மாவட்டங்களில் முன்னோடியாக இந்தத் திட்டத்தை அறிவித்தனர். இந்தத் திட்டத்தின் நிலை என்ன என்பதை அனைவரும் மறந்துவிட்டார்கள். 'நாங்கள் சொல்பவர்களுக்குத்தான் பணிகளைக் கொடுக்க வேண்டும்' என அமைச்சர் அலுவலக ஆட்கள் கொடுத்த அழுத்தத்தால், இத்திட்டமே காணாமல் போய்விட்டது" என்கிறார் வேதனையோடு. 

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்.ரவீந்திரநாத்திடம் பேசினோம். " அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதிலும் தேவையற்ற மருந்துகளை வாங்குவதிலும் தொடர்ந்து ஊழல் நடந்து வருகிறது. மருந்துகளை வாங்கிக் கொடுக்கும் தரகு வேலையைத்தான் சுகாதாரத்துறை செய்து வருகிறது. மாறாக, மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் மூலம் பாரசிட்டமால் உள்ளிட்ட சில மருந்துகளை அரசே தயாரிக்கலாம். இதன்மூலம் கலப்பட மருந்துகளின் விற்பனையைத் தடுக்கலாம். ஊசி, ட்ரிப் செட் உள்ளிட்ட டிஸ்போஸபிள் பொருள்களைத் தயாரிப்பதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை? கூடுதலாகப் பணத்தைக் கொடுத்து தனியாரிடம் இருந்து வாங்குவதையே இவர்கள் ஊக்குவிக்கின்றனர். சுகாதாரத்துறையில் நடக்கும் ஊழல்களைப் பற்றித் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், யார்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" என்றார் ஆதங்கத்தோடு. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். " டெண்டர் நடைமுறைகள் அனைத்தும் விதிமுறைப்படியே நடக்கிறது. இதில் தவறு இருப்பதாகச் சொல்பவர்கள், தாராளமாக நீதிமன்றத்தை அணுகட்டும். தரமற்ற பொருள்களை நாங்கள் வாங்குகிறோம் என யாராலும் நிரூபிக்க முடியாது. அந்தளவுக்கு சுகாதாரத்துறையின் அனைத்து அமைப்புகள் மூலமாகவும் ஆலோசனை நடத்தி, கூட்டு முயற்சியாகத்தான் செயல்படுகிறோம். இதில் எந்தவித முறைகேடும் நடப்பதற்கு வாய்ப்பில்லை" என்றார் உறுதியாக. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!