`ஆணவக்கொலை நடந்துவிடும்; என் மகனையும் மருமகளையும் காப்பாத்துங்க!' - முதல்வருக்குக் கண்ணீர் கடிதம் அனுப்பிய தாய்

`என் மகனையும் அவன் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட என் மருமகளையும் காப்பாற்றுங்கள்' என்று  தமிழக முதல்வர், மாவட்ட, மாநிலக் காவல்துறை உயரதிகாரிகள், ஆட்சியர் உள்ளிட்ட அத்தனை பேர்களுக்கும் இன்று கண்ணீர் மனு எழுதி அனுப்பி இருக்கிறார் ஒரு தாய்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள வெள்ளாகுளம் என்ற ஊரில் வசித்துவரும் மரியசூசை - பாத்திமா மேரி தம்பதியின் மகன் நாஞ்சில் ரூபன் அருள். இவர் கோப்பெருந்தேவி என்பவரைக் காதலித்து, கடந்த ஜனவரி மாதம் திருச்சி பதிவு அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டார். இந்தக் கோப்பெருந்தேவி அருகில் உள்ள ஆலங்காடு என்ற கிராமத்தில் வசிப்பவர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமணம் செய்துகொண்ட விசயத்தை இரண்டுபேரும் ஜனவரி மாதம் இறுதியில் தங்களது வீட்டாரிடம் தெரிவித்து இருக்கிறார்கள். இருவரது பெற்றோருமே அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார்கள். இனிமேல் ஊரில் இருந்தால் தங்களை இணைந்து வாழவிட மாட்டார்கள் என்று முடிவெடுத்த காதலர்கள், பிப்ரவரி மாத தொடக்கத்தில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள். இதை அறிந்த கோப்பெருந்தேவி உறவினர்களும் ஆலங்காடு ஊர் பொதுமக்களும் ஒன்றுதிரண்டு வெள்ளாகுளத்துக்கு வந்து, மரியசூசையையும் அவரின் மனைவி பாத்திமா மேரியையும் மிரட்டிச் சென்றுள்ளனர்.

சிலநாள்களுக்குப் பிறகு, காதலர்கள் இருவரும் திருச்சியில் இருப்பதை மோப்பம் பிடித்த கோப்பெருந்தேவி உறவினர்கள் திருச்சிக்கே சென்று, இருவரையும் சந்தித்து மிரட்டியுள்ளனர். இதனால் இருவரும் கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, தங்கள் உயிருக்குப் பாதுகாப்புத் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இரண்டு வீட்டாரையும் நேரில் வரவழைத்த மகளிர் காவல்துறை அதிகாரி, இருவரும் சட்டத்துக்குப்பட்டு சுய விருப்பத்தின் பேரில்தான் திருமணம் செய்துள்ளார்கள். அவர்களுக்கு ஆபத்தை தரும் எந்த முயற்சியையும் நீங்கள் செய்தால், உங்களைக் கைது செய்ய வேண்டும் என்று பெண்தரப்பினரை எச்சரிக்கை செய்துவிட்டு, காதலர்கள் இருவரையும் மரியசூசையுடன் அனுப்பி இருக்கிறார்கள். காரில் ஊருக்குத் திரும்பும் வழியில், காதலர்கள் இருவரும் தப்பிவிட்டார்கள். அவர்கள் இருவரும் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியாமல் இரண்டு ஊரிலும் நாளுக்கு நாள் டென்ஷன் எகிறிக் கொண்டே இருக்கிறது. இந்தச் சூழலில்தான்  எல்லா அதிகாரத் தரப்புக்கும் 'என் மகனையும் மருமகளையும் காப்பாற்றுங்கள்' என்ற கதறல் மனுக்களை இன்று அனுப்பி இருக்கிறார் தாயார் பாத்திமா மேரி.

அவரை நேரில் சந்தித்துப் பேசினோம். "ஊரில் நாங்க மைனாரிட்டி சமூகம். அவங்கதான் மெஜாரிட்டியா இருக்காங்க. என்னோட பையன் அவங்க சமூக பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதில் எங்களுக்கும் உடன்பாடு இல்லைதான். ஆனால், இப்போது எங்களுடைய பிடிவாதத்தை முழுவதுமாக விட்டுவிட்டோம். அதற்குக் காரணம், இரண்டு பேரும் உயிருடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் தவிர, எங்கள் உயிருக்குமே இப்போது பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைதான் இருக்கிறது. பொண்ணு வீட்டுத் தரப்பிலிருந்து  நேரிலும் போனிலும் மிரட்டுகிறார்கள். பொண்ணை ஒப்படைக்கவில்லை என்றால், ஊரையே கொளுத்திவிடுவோம் என்கிறார்கள். நாங்கள்தான் இரண்டு பேரையும் ஒளித்து வைத்திருக்கிறோம் என்று டார்ச்சர் செய்கிறார்கள். அவங்க எங்க இருக்காங்கன்னு சத்தியமா எங்களுக்குத்தெரியாது. அவங்களை உயிரோடு மீட்டு, அவங்களுக்கும் எங்களுக்கும் பாதுகாப்புத் தரவேண்டும் என்று மனு எழுதி, இன்று (12.02.2018) மாநில, மாவட்ட அளவிலான எல்லா அதிகாரிகளுக்கும் முதல்வருக்கும் கலெக்டருக்கும் அனுப்பியிருக்கிறேன்" என்றார்.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராடிக்கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆலங்குடி ஒன்றியச்செயலாளர் வடிவேலுவிடம் பேசினோம். "திருமணம் செய்துகொண்ட இருவருமே மேஜர். பெண்ணை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று எதிர்தரப்பு தொடர்ந்து மரியசூசையை மிரட்டி வருகிறது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்துள்ளோம்" என்றார். கோப்பெருந்தேவியின் அப்பாவான கோவிந்தனிடம் பேச முயற்சித்தோம். முடியவில்லை. அவர் தரப்பு விளக்கத்தைப் பெற தொடர்ந்து முயன்று வருகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!