``சாலையை ஸ்தம்பிக்க வைத்த சமந்தா!’’ - நகைக்கடை உரிமையாளர் மீது வழக்கு

நடிகை சமந்தா நேற்று (11-ம் தேதி) கிருஷ்ணகிரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பேலஸ் என்ற நகைக்கடை திறக்கப்பட்டது. இந்தக் கடை திறப்பு விழாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே நகர் முழுவதும் நடிகை சமந்தா கலந்துகொள்வதாக போஸ்டர் பேனர்கள், போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. நேற்றைய விழாவில் பங்கேற்க வந்த சமந்தாவைக் காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடிவிட்டதால் கிருஷ்ணகிரி நகர மையப்பகுதியில் உள்ள பெங்களூரு - சென்னை சாலை முழுவதும் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

நடிகை சமந்தா

சமந்தா விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் விதமாகச் சென்னை சாலையில் புனித அன்னாள் பள்ளி அருகில் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைத்து வாகனங்கள் அனைத்தையும் திருப்பிவிட்டு 2 மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது. அதேபோல கிருஷ்ணகிரி நகரத்தில் இருக்கம் ரவுண்டானா சாலையில் வந்த வாகனங்களை 2 மணி நேரமாக போலீசார் திருப்பிவிட்டனர். இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பொதுமக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிப்படைந்தனர். 

இதுதவிர நேற்றைய தினம் கிருஷ்ணகிரி நகரப் பகுதியில் அரசு மகளிர் மற்றும் அரசு ஆண்கள் பள்ளியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதவந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு குறித்த நேரத்தில் தேர்வு அறைக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். 

இந்தச் சம்பவம் கிருஷ்ணகிரி நகர மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தவே வெங்கடேஸ்வர நகைக் கடையின் உரிமையாளர் சுரேஷ் மீது 283 பிரிவில் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகக் கூட்டத்தைக் கூட்டியதாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!