சர்வோதய மேளா தினம்: ராமேஸ்வரம் கடலில் காந்தியடிகளுக்கு மலரஞ்சலி

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட 70-ம் ஆண்டினை முன்னிட்டு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

ராமேஸ்வரம் அக்னிதீர்த்தத்தில் காந்தியடிகளுக்கு மலரஞ்சலி.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் இறப்பினைத் தொடர்ந்து அவரது அஸ்தி ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் 1948-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி கரைக்கப்பட்டது. ஆண்டு தோறும் இந்த நாளினை சர்வோதய மேளா தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வோர் ஆண்டும் இன்றைய தினத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மலரஞ்சலி செலுத்துவதை சர்வோதய சங்கத்தினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சர்வோதய தினமான இன்று மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் பகுதிகளைச் சேர்ந்த சர்வோதய சங்கத்தினர் மதுரை சர்வோதய சங்கத் தலைவர் த.கு.சுப்பிரமணியன் தலைமையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து கடலில் மலரஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சர்வ மத பிரார்த்தனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலின் நான்குரத வீதிகளில் காந்தியடிகளின் படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், ஶ்ரீவில்லிபுத்தூர்,ராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த சர்வோதய மேளா கமிட்டி நிர்வாகிகளும், காந்திய அன்பர்களும் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!