`கேப்டன் பிரபாகரன்' படத்தை நினைவுபடுத்தும் இளைஞரின் வாழ்க்கை!

'கேப்டன் பிரபாகரன் ' படத்தில் சிறு வயது விஜயகாந்த்தை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தம்பதி, சாலையில் வைத்துப் பார்ப்பார்கள். பிச்சை கேட்ட சிறுவனைப் பார்த்து, 'நீ எங்ககூட வந்துடுறீயா உன் பெயர் என்னயா?'' என்று தாயார் வேடத்தில் வரும் காந்திமதி கேட்பார். சிறுவன் ''பிரபாகரன்'' என்று சொல்வார். தந்தை வேடத்தில் நடித்தவர் சிறுவனின் பெயரை மாற்றுவார். அப்போது காந்திமதி, 'மதம் என்னங்க மதம்... மனம்தான் முக்கியம்... இந்தப் பையன் நம்ம வீட்டுல பிரபாகரனாகவே வளரட்டும்' என்று சொல்வார். இப்போது, அதேபோலவே ஓர் உண்மைச்சம்பவம் நடந்துள்ளது. 

நிஜ வாழ்க்கையில் கேப்டன் பிரபாகரன் படத்தைப் போல சம்பவம்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த முனானுதீன் - கவுசர் தம்பதிக்குக் குழந்தை இல்லை. இந்து மதத்தைச் சேர்ந்த ராகேஷ் ரஸ்டோகி என்ற சிறுவனை 12 வயதில் இருந்து தத்தெடுத்து வளர்த்தனர். ராகேஷின் பெயர் மாற்றப்படவில்லை. அதே பெயருடன்தான் முனானுதீன் வீட்டில் ராகேஷ் வளர்ந்து வந்தார். இளைஞராகிவிட்ட மகனுக்கு முனானுதீன் தம்பதி பெண் தேடினர். இஸ்லாமிய பெண்ணை மகனுக்கு கட்டிவைக்க விரும்பாத அவர்கள், சோனி என்ற இந்துப் பெண்ணை  பேசி முடித்தனர். ராகேஷ்- சோனி திருமணம் பிப்ரவரி 9-ம் தேதி இந்து முறைப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது. இஸ்லாமியப் பெற்றோரின் பெருந்தன்மையான இந்தச் செயலை அக்கம்பக்கத்தினர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

ராகேஷ் இது குறித்துக் கூறுகையில், ''இந்த வீட்டில் நான் ஓர் இந்துவாகவே வாழ்ந்தேன். என் பெற்றோருடன் தீபாவளி, ஹோலி என அத்தனை பண்டிகையையும் கொண்டாடுவேன். இஸ்லாமிய வீட்டில் வளர்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் என்னை அவர்கள் வளர்த்தனர். எல்லாவிதத்திலும் என் குடும்பம் எனக்கு உதவியாக இருந்தது'' என்றார். கேப்டன் பிரபாகரன் படத்தில் இந்துப் பெண்ணையே விஜயகாந்த்துக்குத் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இந்தச் சம்பவத்தை வட இந்திய மீடியாக்கள் கூறுகின்றன.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!