வெளியிடப்பட்ட நேரம்: 09:39 (13/02/2018)

கடைசி தொடர்பு:09:39 (13/02/2018)

என்னது, ஷேக்ஸ்பியர் காப்பி அடிச்சாரா...? காட்டிக்கொடுக்கும் `WCopyfind' மென்பொருள்!

``ஆமா, இவரு பெரிய ஷேக்ஸ்பியருக்குப் பேரப்புள்ள... இங்கிலீஷ்லேயேதான் பேசுவாரு!” என்பதுபோன்ற ஒரு கமென்ட்டை நாம் அனைவருமே கடந்திருப்போம். ஆங்கில மொழிப் புலமையில் தேர்ந்து விளங்கும் அனைவரையும் ஒப்பிட்டுப்பார்க்க உதவுவது நம்ம தலைவர் ஷேக்ஸ்பியர்தான். சும்மாவா? 39 நாடகங்கள், 154 `சானெட்' எனப்படும் பதினான்கடி கவிதைகள், எழுதி முடிக்காத சில படைப்புகள் என இலக்கிய உலகின் மாமேதை ஷேக்ஸ்பியர்.

ஷேக்ஸ்பியர்

இப்பேர்பட்ட ஷேக்ஸ்பியரே `Plagiarism' செய்திருக்கக்கூடும் என்று, மென்பொருள் வழியே இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

`Plagiarism'னா என்னங்கையா?

சுருக்கமா சொல்லணும்னா, கருத்துத் திருட்டு. விரிவா சொல்லணும்னா, இணையதளமோ, புத்தகமோ, படைப்பாளருடைய வரிகளை/கருத்துகளை  அவருடைய உரிமை இல்லாம crtl + C, ctrl + V செய்தா, அதுதான் `plagiarism'. கொடுத்த அசைன்மென்ட் கடைசி நேரத்துல திக்திக் அப்படின்னு முடிக்கிறதுக்கு எப்போதும் மாணவர்களுக்குக்கூட இருக்கிறதுக்கு இந்த மாதிரி விஷயங்கள்தான். ஆனா, நாம என்னதான் நாசூக்கா இந்த மாதிரி வேலை செய்ய நினைச்சாலும், எங்கே இருந்து நாம விஷயங்களை எடுக்கிறோமோ அதே இடத்துல இதைக் கண்டுபிடிக்கவும் வழி இருக்குமா, இல்லையா? (கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா, அப்படின்னு நீங்க சூனா பானாவை நினைத்தால் கம்பெனி பொறுப்பில்லைஜி )

ஒருவர் செய்யும் கருத்துத் திருட்டைக் கண்டுபிடிப்பதற்காகவே உள்ளது `WCopyfind' எனும் மென்பொருள். இதன் வழியாக உங்கள் எழுத்து உங்களுடையதுதானா அல்லது மண்டபத்தில் வேறு யாரோ எழுதிக் கொடுத்து நீங்கள் வாங்கி வந்தீர்களா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

Rebellion and Rebels
 

இந்த மென்பொருள், தற்போது சத்தமே இல்லாமல் இணையத்தைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. காரணம், ஷேக்ஸ்பியர்!

உண்மையைத்தான் சொல்றீங்களா பாஸ்?

பதினாறு, பதினேழாம் நூற்றாண்டில் இதுபோன்ற வேலைகள் எல்லாம் நடந்தனவா என்றால், ``ஆம்” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் டெனிஸ் மெக்கார்த்தியும் ஜுன் ஷ்லாய்ட்டரும். `16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜார்ஜ் நார்த் என்பவருடைய நூல், `Rebellion and Rebels’ கையெழுத்துப் பிரதி. `ரிச்சர்ட் |||', `மேக்பெத்', `ஹென்றி V' மற்றும் `கிங் லியர்' ஆகிய நாடகங்களில் இந்த நூலின் தாக்கம் உள்ளதாக இந்த மென்பொருளின் உதவியோடு இவர்கள் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள்.

கதைக்கரு, காட்சிகள் இவற்றை எல்லாம்விட, வெகு எளிதாக இவர்களால் காண முடிந்தது, இரண்டு நூல்களுக்கு இடையில் உள்ள எழுத்துக் கட்டமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதுதான்!

நார்த்துடைய நூலின் தொடக்கத்தில் `proportion’, `glass’, `feature’, `fair’, `deformed’, `world’, `shadow’, `nature’ போன்ற வார்த்தைகள் எந்தக் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளனவோ, அதே கட்டமைப்பில் இந்த வார்த்தைகள் அட்சரம் பிசகாமல் அப்படியே `ரிச்சர்ட் |||' நூலிலும் இடம்பெற்றுள்ளன. இதைப்போலவே `நாய்' என்பதற்கு ஜார்ஜ் நார்த் `mastiff’, `trundle-tail’ என்பது போன்ற ஆறு சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இதே சொற்களையே `கிங் லியர்' மற்றும் `மேக்பெத்'திலும் ஷேக்ஸ்பியர் பயன்படுத்தியுள்ளார்.

`அட, ஒரே மாதிரியான சொற்களைப் பயன்படுத்தினால் அவர் அப்படிச் செய்தார் என அர்த்தமாகிவிடுமா?' என்று நாம் நினைத்தால், அதற்கும் அவர்கள் இருவரும் பதில் வைத்துள்ளனர். ஆராய்ச்சியாளர் மெக்கார்த்தி, கிட்டத்தட்ட 17 மில்லியன் பக்கங்களை இந்த மென்பொருள் மூலமாக அவர் அலசி ஆராய்ந்திருக்கிறார். ``எந்த ஒரு படைப்பிலும் இப்படிக் கதைக்கரு, நிகழ்வுகள், வார்த்தைகள் அட்சரம் பிசகாமல் அப்படியே பயன்படுத்தியதில்லை'' என்கிறார் அவர்.

இந்த ஆராய்ச்சி மேலும் மேம்படுத்தப்பட்டால், இலக்கிய உலகில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை!


டிரெண்டிங் @ விகடன்