கிருஷ்ணகிரி டயர் மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ விபத்து! | Fire at krishnagiri tyre re-treating Company

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (12/02/2018)

கடைசி தொடர்பு:21:30 (12/02/2018)

கிருஷ்ணகிரி டயர் மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ விபத்து!

கிருஷ்ணகிரியில் இயங்கிவரும் டயர் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான டயர்கள் எரிந்து நாசமாகின.

பழைய டயர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான டயர் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் பழைய டயர்களை பவுடராக மாற்றி, அந்த பவுடரை மீண்டும் ரப்பராக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காகக் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய டயர்களை வாங்கித் தொழிற்சாலைக்கு அருகே மலைபோலக் குவித்து வைத்திருந்தனர். குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய டயர்கள் இன்று (12.2.2018) மதியம் 2 மணியளவில் தீப்பிடித்து எரியத் தொடங்கின. உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தனர். ஆனால், அதற்குள் குவியல்போல் அடுத்தடுத்து இருந்த பழைய டயர்களில் தீ வேகமாகப் பரவி மொத்தமாக எரிய ஆரம்பித்துவிட்டது. 

இதனால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர், பழைய டயர்களில் பிடித்த தீ வான் உயரக் கரும்புகையை எழுப்பி தேசிய நெடுஞ்சாலைப் பயணிகளைப் பீதி அடையச் செய்தது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் குருபரப்பள்ளி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருள்கள் எரிந்துள்ளதாக முதற்கட்டமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.