``ரூ.3,600 கோடி சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளனர்!’’ - ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த சி.பி.எம்.

பேருந்துக் கட்டண உயர்வு மூலம் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி அளவுக்கு மக்கள்மீது சுமையை அரசு சுமத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட சுமார் 100 பேரை போலீஸார் கைது செய்தனர். 

தோழர் ராசாத்தி

போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்  ராசாத்தி கூறுகையில், ''விலையேற்றம், வறட்சி, வேலையின்மை போன்ற பிரச்னைகளால் தமிழக மக்கள் வாழ்விழந்து தவித்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையை மாற்றி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாத அ.தி.மு.க., அரசு, ஆட்சியைப் பாதுகாப்பதிலும், ஊழல் முறைகேடுகளை முன்னெடுப்பதிலும், குறியாக இருந்து வருகிறது. இப்போது பொதுமக்கள் தலையில் மேலும் ஒரு இடியாக பேருந்துக் கட்டண உயர்வைத் தமிழக அரசு சுமத்தியுள்ளது.

பேருந்துக் கட்டண உயர்வின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.3,600 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதிலிருந்தே, இச்சுமை சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அன்றாடம் பேருந்துகளில் பயணிக்கும் தினக்கூலி உழைப்பாளர்கள், நடுத்தர மக்கள், மாணவ மாணவியர்களின் போக்குவரத்துச் செலவு இரட்டிப்பாக உயர்ந்து மூச்சுமுட்டச் செய்துள்ளது. இக்கட்டண உயர்வை எதிர்த்துப் பொதுமக்களும், அனைத்து எதிர்க்கட்சிகளும், மாணவர்களும் களத்தில் இறங்கிப் போராடிய பிறகும் தமிழக அரசு கட்டண உயர்வை முற்றாகத் திரும்பப்பெற மறுத்து வருகிறது.

ஒரு கிலோ மீட்டருக்குப் புறநகர் பேருந்துகளில் 42 பைசாவாக இருந்த கட்டணத்தை 60 பைசாவாக உயர்த்தி 58 பைசாவாகக் குறைத்துள்ளனர். இதேபோன்று எக்ஸ்பிரஸ், அதிநவீன சொகுசுப் பேருந்து, குளிர் சாதன பேருந்துக் கட்டணங்களையும், தமிழக அரசு தாறுமாறாக உயர்த்தி, பின்னர் குறைத்ததுபோல் கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ளது. தற்போது சீசன் டிக்கெட், பாஸ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராடியபோது, அவர்கள் மீது காவல்துறையைக் கொண்டு தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல், பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையிலும், அடைத்துள்ளது தமிழக அரசு.

போக்குவரத்து சேவையின் அத்தியாவசியத் தன்மையைப் புரிந்துகொண்டு, போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை, மாநில அரசு தனது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்வதன் மூலம் சரிப்படுத்த வேண்டும். மாறாக மக்கள் தலையில் சுமையேற்றுவதைக் கண்டிப்பதோடு, தமிழக அரசு பஸ் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த மறியல் போராட்டத்தை நடத்தினோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!