வெளியிடப்பட்ட நேரம்: 20:13 (12/02/2018)

கடைசி தொடர்பு:20:13 (12/02/2018)

``களவாடப்பட்ட மின்கம்பி’’ - கவலையில் மின்சாரவாரியம்!

ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புப் பகுதியில் மின்சாரத்தைத் துண்டிக்காமலே மின்கம்பிகளைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருடர்கள் மின்கம்பியை திருடி சென்ற நிலையில் சீர்செய்யும் மின் ஊழியர்கள்
 

மண்டபம் ரயில் நிலையம் அருகே ரயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு 50-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தக் குடியிருப்புகளில் நேற்று (11.2.2018) இரவு திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் மண்டபம் மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்புகொண்டு மின்சாரம் தடைபட்டுள்ளதைத் தெரிவித்துள்ளனர். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மின் விநியோகம் குறித்த சாதனங்களைச் சோதனை செய்தபோது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்ற சிக்னலையே காட்டியுள்ளது. இதனால் மின் தடை ஏற்பட்டது குறித்து பெரிதுபடுத்தாமல் இருந்துவிட்டனர்.

இந்நிலையில் இன்று (12.2.2018) காலை ரயில்வே ஊழியர் குடியிருப்பு பகுதியில் இருந்து மீண்டும் புகார் வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதிக்கு மின் விநியோகிக்கும் டிரான்ஸ்ஃபார்மர் உள்ளிட்டவற்றைச் சோதனை செய்த போதும் மின் தடை ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. இதனால் குழப்பம் அடைந்த மின்வாரிய ஊழியர்கள் ரயில்வே ஊழியர் குடியிருப்புப் பகுதியில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஊழியர் ஒருவர் எதேச்சையாக அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தினைப் பார்த்து அதிர்ச்சியானார். அந்த அதிர்ச்சிக்குக் காரணம் ஊழியர் குடியிருப்புப் பகுதியில் நடப்பட்டுள்ள மின்கம்பங்களில் இரு கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் முழுமையாகக் காணாமல் போயிருந்ததுதான். 

இரு கம்பங்களுக்கு இடையே மின்சாரத்தை எடுத்துச் செல்லும் காப்பர் கம்பிகளில் சுமார் 60 மீட்டர் நீளம் உடைய கம்பிகளை மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும் போதே துண்டித்து திருடிச் சென்றுள்ளதைக் கண்ட மின்வாரிய ஊழியர்கள் ஷாக் ஆகிவிட்டனர். திருடிச் செல்லப்பட்ட மின்கம்பியின் மதிப்பு ரூ.15 ஆயிரம் எனத் தெரிகிறது. இதையடுத்து புதிய மின்கம்பிகளைப் பொறுத்தும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும், இதுதொடர்பாக மண்டபம் ரயில்வே மின்பிரிவு அலுவலர்கள் ராமேஸ்வரம் மற்றும் மானாமதுரை ரயில் நிலையக் காவல்நிலைய போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.