வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (12/02/2018)

கடைசி தொடர்பு:22:30 (12/02/2018)

``தமிழ்நாடு பாவற்காய் பந்தலாகிவிடும்!’’ - போராட்டத்தில் கொந்தளித்த விவசாயிகள்

விளைநிலங்களில் மத்திய, மாநில மின் வாரியத்தின் மூலம் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சண்முகத்திடம் பேசினோம். அவர் கூறுகையில் ''தமிழகத்தில் 30 வழித்தடங்களில் உயர் மின்அழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு தாராபுரம் அருகே உள்ள புகழுரில் ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய மின்நிலையத்தை மத்திய மின்வாரியம் அமைக்க இருக்கிறது. இதற்காக 2,024 கி.மீட்டரில் தமிழ்நாட்டில் மின் கம்பிகள் இழுக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு பாவற்காய் பந்தலைப்போல இருக்கும்.

வெளிநாடுகளில் இருப்பதைப்போல இந்த உயர் அழுத்த மின் கம்பிகளைத் தரை வழியாக நிலத்திற்குக் கீழ் கேபிள் மூலம் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அதற்குப் பணம் சற்றுக் கூடுதலாகச் செலவாகும் என்பதால் விளைநிலங்கள் மேல்கொண்டு செல்லுகிறார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன. 2015-ம் ஆண்டு ஒப்பந்தப்படி, 'விளைநிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படும் இடத்திற்கு 85 சதவிகிதம் மானியமும், ஒரு உயர் அழுத்த மின் கோபுரத்தில் இருந்து மற்றொரு உயர் மின் அழுத்த கோபுரத்திற்கு இடையில் மின் கம்பிகள் செல்லும் இடத்திற்கு 15 சதவிகித மானியமும் வழங்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விவசாயிகளிடம் ஆய்வு கூட்டம் போட்டுத் தெரிவிக்க வேண்டும்'. ஆனால் , அது தொடர்பாக எந்த கலெக்டரும் இதுநாள் வரை கூட்டம் போட்டு விவசாயிகளிடம் தெரிவிக்கவில்லை.

மேலும், விளை நிலங்களில் யாரையும் கேட்காமல் மின் கோபுரங்கள் அமைப்பதால் விவசாயிகளுக்கும் மின் கோபுரம் அமைக்கும் தொழிலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அவர்கள் அடாவடித்தனமாகச் செயல்படுகிறார்கள். இதன் மூலம் தமிழகத்தில் 16 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த உயர் மின் அழுத்தக் கம்பிகளுக்கு அருகில் வீடு கட்ட முடியாது, கால்நடைகள் வைத்திருக்க முடியாது, ஆழ்துளை கிணறு, மரப்பயிர்கள் எதுவும் வைக்க முடியாது'' என்றார்.