’’இரவு பகல் பாராமல் உழைக்கும் எங்களுக்குப் பணியில் பாதுகாப்பில்லை!’’ - போராட்டத்தில் குதித்த செவிலியர்கள் | Nurses staged protest in Ramanadhapuram

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (13/02/2018)

கடைசி தொடர்பு:00:00 (13/02/2018)

’’இரவு பகல் பாராமல் உழைக்கும் எங்களுக்குப் பணியில் பாதுகாப்பில்லை!’’ - போராட்டத்தில் குதித்த செவிலியர்கள்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் செவிலியர் மணிமாலாவின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை முன்பாக செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

செவிலியர் தற்கொலைக்கு காரணமனவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தவர் மணிமாலா(24). கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்  கடந்த  10-ம் தேதி பணியில் இருந்தபோது தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு அங்கு பணியாற்றும் மருத்துவர்கள்தான் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் செவிலியர் மணிமாலாவின் இறப்புக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.    

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை மூத்த செவிலியர் வீரம்மாள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மருத்துவர்கள் செய்யும் தவறுக்கு செவிலியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பழிவாங்கும் போக்கு தமிழகம் முழுவதும் நடந்து வருவதாகவும், இதனால் இரவு பகல் பாராமல் பணி செய்யும் செவிலியர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், இந்த விவகாரத்தில் மருத்துவத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மணிமாலாவின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக செவிலியர் மணிமாலாவின் இறப்புக்கு  அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்துச் செவிலியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.