Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆக்ஸஸ், கிராஸியா, என்டார்க்... 125சிசி ஸ்கூட்டரில் எது பெஸ்ட்? #tvsntorq125 

இந்திய ஸ்கூட்டர் செக்மென்ட்டில் முன்னணியில் இருக்கும் டிவிஎஸ் நிறுவனம், தனது புதிய 125சிசி ஸ்கூட்டரான NTorq-யை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டர் - ஸ்கூட்டி பெப் ப்ளஸ், ஸ்கூட்டி ஜெஸ்ட், வீகோ, ஜூபிட்டர் என்று 90 - 110சிசி திறனில் இருக்கும் டிவிஎஸ்ஸின் ஸ்கூட்டர் வரிசையில் தற்போது இணைந்துள்ளது. இளம் தலைமுறையினரை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பது, இதன் தோற்றத்தை வைத்தே புரிந்துகொள்ள முடிகிறது. மறைந்திருந்து எதிரிகளைத் தாக்கக்கூடிய ஜெட் விமானமான stealth Aircraft-ன் டிசைனை அடிப்படையாகக்கொண்டு  NTorq 125 ஸ்கூட்டரை வடிவமைத்திருப்பதாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது. ஷார்ப்பான டிசைன், 4 மேட் ஃபினிஷ் கலர்கள், அதிகப்படியான வசதிகளோடு களமிறங்கி உள்ளது NTorq 125. தற்போது விற்பனையில் இருக்கும் சுஸுகி ஆக்ஸஸ் 125, ஆக்டிவா 125, வெஸ்பா 125 LX, ஏப்ரிலியா SR 150 மற்றும் ஹோண்டா கிராஸியா ஆகிய 125 சிசி ஸ்கூட்டர்களோடு NTorq 125 போட்டி போடவுள்ளது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள், இந்த ஸ்கூட்டர், முதல் பார்வையிலேயே இளைஞர்களைக் கவருமா? 

TVS NTorq

டிசைன்

NTorq 125 மாடர்ன் டிசைனைக் கொண்டுள்ளது. இதுவரை இருந்த டிவிஎஸ் ஸ்கூட்டர்களின் தோற்றத்தில் இருந்து வேறுபட்டு, ஸ்போர்ட்டியான டிசைனில் NTorq 125 வடிவமைக்கப்பட்டு உள்ளது. முன்பக்கம் உள்ள இண்டிகேட்டர், பின்பக்கம் உள்ள தனித்துவமான 'T' வடிவ LED டெயில் லைட், பின் பக்க ஏரோ ஃபின்ஸ் என்று பார்வைக்கு மிக அழகாக இருக்கிறது NTorq 125. பெப் ப்ளஸ், ஜெஸ்ட்., விகோ, ஜூபிட்டர் போல மொழுக் என்றில்லாமல், எப்படிப் பார்த்தாலும் அக்ரஸிவான டிசைனோடு பார்க்கவே படு ஸ்போர்ட்டியாக உள்ளது  NTorq 125 . ஆனால், எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும், இந்த ஸ்கூட்டர் நமக்கு ஜெட் விமானத்தை ஞாபகப்படுத்தவில்லை. ஒட்டுமொத்த டிசைன் புதுமையானது இல்லையென்றாலும், டெயில் லைட் போல வடிவமைப்பில் உள்ள சில அம்சங்கள் தனித்துவமானவை. சில சந்தர்ப்பங்களில் அதன் போட்டியாளர் ஹோண்டா க்ராஸியாவையும் NTorq 125 நினைவுப்படுத்துகிறது. டியோவை இந்த 4G காலத்துக்கு ஏற்ப டியோவை மாற்றியமைத்ததுதான், ஹோண்டா கிராஸியாவின் தோற்றம். 

TVS NTorq

ஆனால், அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்படி காட்சியளித்தது கிராஸியாவின் ப்ளஸ். LED ஹெட்லைட் உள்ள ஸ்கூட்டர் கிராஸியாதான். டேக்கோமீட்டருடன் கூடிய ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கிராஸியாவில் மட்டுமே இருக்கிறது. ஏப்ரிலியா SR 125-ன் டிசைன் முற்றிலும் புதுமையானது. மற்ற ஸ்கூட்டர்கள் எல்லாம் ஆன்ரோடு பயன்பாட்டுக்காக டிசைன் செய்யப்பட்டது என்றால், ஏப்ரிலியா SR 125 ஆஃப் ரோடு பைக்கின் டிசைனை வைத்து வடிவமைக்கப்பட்டது. அதற்கேற்ப இந்த ஸ்கூட்டர் அகலம் குறைவானதாகவும், பார்ப்பதற்கு சிறிதாகவும் இருக்கிறது. கிராஸியா, NTorq இரண்டுமே பொதுவான டிசைன்தான், பலருக்குப் பிடித்த டிசைனாக இருக்கும். ஆனால் ஏப்ரிலியா போன்ற ஆஃப் ரோடு பைக் மாதிரியான டிசைன், சிலருக்கு மட்டுமே பிடிக்கும். அந்தச் சிலருக்கு, ஏப்ரிலியா தவிர வேறு ஆப்ஷன்களே இல்லை. வெஸ்பா மற்றும் ஆக்ஸஸ் ஆகிய இரண்டும், எப்போதும் மவுசு குறையாத க்ளாசிக் டிசைனில் கவர்கின்றன. 

 

சிறப்பம்சங்கள் மற்றும் ஸ்டோரேஜ் ஸ்பேஸ்

TVS NTorq

ஏப்ரிலியாவில் 14 இன்ச் வீலும், வெஸ்பாவில் 10 இன்ச் வீலும் உள்ளது. ஆக்ஸஸ் மற்றும் கிராஸியாவின் முன்பக்கத்தில் மட்டும் 12 இன்ச் வீல். NTorq-ல் 12 இன்ச் வீல்கள் உள்ளன. சீட்டுக்கு அடியில் உள்ள ஸ்டோரேஜ் ஸ்பேஸை ஒப்பிடுகையில், ஏப்ரிலியாவில் ஒரு Full Face ஹெல்மெட்டை வைக்க முடிகிறது. ஆனால், வெஸ்பாவில் Open Face ஹெல்மெட்டை மட்டுமே வைக்கமுடியும். வெஸ்பாவில் வெறும் 16.5 லிட்டர் ஸ்டோரேஜ்தான் உள்ளது. க்ராஸியாவில் 18 லிட்டர் இருந்தாலும் Full Face ஹெல்மெட்டை வைக்கமுடியவில்லை. இந்த ஏரியாவில் ஆக்ஸஸ்தான் இதுவரை டாப்பாக இருந்தது. ஆனால், அந்த இடத்துக்கு இப்போது Ntorq வந்துவிட்டது. ஆக்ஸஸில் 21 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் என்றால், NTorq ஸ்கூட்டரில் இருப்பது 22 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ். ஸ்கூட்டரின் அம்சங்களை ஒப்பிடுகையில் வெஸ்பாவும், ஏப்ரிலியாவும் தனித்தனிப் பாதையில் போய்க்கொண்டிருக்கின்றன. ஏப்ரிலியாவில் அனலாக் மீட்டர் என்றால், வெஸ்பா மற்றும் ஆக்ஸஸில் அனலாக் - டிஜிட்டல் கலந்த மீட்டர் இருக்கிறது. கிராஸியாவிலும், NTorq-லும் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல். NTorq ஸ்கூட்டரில் SmartXonnect எனும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஓட்டுநரின் மொபைலை ப்ளூடூத் மூலம் ஸ்கூட்டருடன் கனெக்ட் செய்துகொள்ளலாம். இதன் மூலம் ஸ்கூட்டரில் ஜிபிஎஸ் மேப் வசதி, டாப் ஸ்பீடை ரெக்கார்டு செய்யும் வசதி, லேப் டைமர், மொபைல்போன் பேட்டரியின் நிலை, கடைசியாக ஸ்கூட்டர் பார்க் செய்த இடத்தைக் காட்டும் வசதி, சர்வீஸ் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டும் வசதி, ஸ்ட்ரீட் மற்றும் ஸ்போர்ட் என்ற இரண்டு வகையான ரைடிங் மோடு என்று 55 அம்சங்களை இந்த கன்சோலில் நிரப்பியுள்ளது டிவிஎஸ். இது மட்டுமல்லாமல் பாஸ் லைட் ஸ்விட்ச், பார்க்கிங் பிரேக், இன்ஜின் கில் ஸ்விட்ச் என்று கூடுதல் அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. ஸ்மார்ட் கனெக்ட் வசதியுள்ள முதல் ஸ்கூட்டர் இதுதான். சிறப்பம்சங்களில் தற்போதைக்கு சிறந்த ஸ்கூட்டர் NTorq என்பது நிச்சயமாகி இருக்கிறது. ஆனால் அன்றாடப் பயன்பாட்டுக்கான ஸ்கூட்டரில் லேப் டைமர், டாப் ஸ்பீடு ரெக்கார்டர் போன்ற வசதிகள் ஏன்? எதற்கு? என்பதுதான் புரியவில்லை. 

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

NTorq-ல் இருப்பது, 3 வால்வ், ஏர் கூல்டு, 124.78 சிசி இன்ஜின். இந்த இன்ஜின் 9.5bhp பவரையும் 1.05kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஏப்ரிலியாவுக்கும், வெஸ்பாவுக்கும் அடுத்தபடியாக அதிக பவர் தரும் ஸ்கூட்டர் இதுதான். வெஸ்பா 10.1bhp பவரும், ஏப்ரிலியா 9.46bhp பவரும் தருகிறது. ஆனால், டார்கை எடுத்துக்கொண்டால் ஏப்ரிலியாவில் 0.85kgm டார்க்தான் உள்ளது. இங்கிருக்கும் அனைத்தையும்விட அதிகமாக, வெஸ்பாவில் 1.06kgm டார்க் இருக்கிறது. ஆக்ஸஸ் 8.7bhp பவரும், 1.02kgNm டார்க்கும் தருகிறது, கிராஸியா 8.5bhp பவரும் 1.05kgm டார்க்கும் வெளிப்படுத்துகிறது. பவர் டார்க் விஷயத்தில், இரண்டையும் கணிசமான அளவில் தருகிறது NTorq. பெயருக்கு ஏற்ப அதிக டார்க் கொண்ட ஸ்கூட்டராகவும் இது உள்ளது. 

 

டெக்னிக்கல் விபரங்கள்

கிராஸியாவிலும் வெஸ்பாவிலும் 90/90 (முன்/பின்) சைஸ் டயர்கள் உள்ளன. ஆக்ஸஸில் 90/100 (முன்/பின்) சைஸ் டயர் உள்ளது. NTorq-ல் 100/110 (முன்/பின்) டயர் சைஸ், மற்ற ஸ்கூட்டர்களை விட பெரியதாக இருக்கிறது. என்றாலும், ஏப்ரிலியாவில் அதைவிடப் பெரிய 120/120 (முன்/பின்) சைஸ் டயர்கள் உள்ளன. இதன் செக்மென்ட்டிலேயே அதிக எடை கொண்ட ஸ்கூட்டர் NTorqதான். இதன் எடை 116 கிலோ. அதாவது, மெட்டல் பாடி கொண்ட வெஸ்பாவை விட 2 கிலோ எடை அதிகம். ஆனால், 102 கிலோ எடைகொண்ட ஆக்ஸஸை விட 14 கிலோவும், 107 கிலோ எடையுள்ள கிராஸியாவை விட 5 கிலோ எடை அதிகம்! அதிக எடை நிச்சயம் மைலேஜைப் பாதிக்கும் என்றாலும், 'இந்த ஸ்கூட்டரில் மைலேஜை எதிர்பாக்காதீங்க... இது பர்ஃபார்மன்ஸ் ஸ்கூட்டர்' என்று Ntorq-ன் அறிமுக விழாவிலேயே தெளிவாகச் சொல்லிவிட்டது டிவிஎஸ்.

TVS NTorq

முதல் தீர்ப்பு 

விலையினால் வென்ற ஸ்கூட்டர்கள்தான், இந்தியச் சந்தையில் அதிகம். ஆகவே, விலையை ஒப்பிட்டால் 85,732 ரூபாய்க்குக் கிடைக்கும் வெஸ்பா 125LX, அதிக விற்பனையை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதுபோல தெரியவில்லை. ஏப்ரிலியா SR 125-ன் சென்னை ஆன்ரோடு விலை இன்னும் வரவில்லை. ஆனால், நிச்சயமாக 75 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் இருக்கும். கிராஸியா 73,117 ரூபாய்க்கும், ஆக்ஸஸ் 70,000 ரூபாய்க்கும் கிடைக்கிறது. டிவிஎஸ் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை இன்னும் வரவில்லை, தோராயமாக 74 ஆயிரம் ரூபாய் இருக்கலாம். விலை கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தாலும், சிறப்பம்சங்கள் - டிசைன் - தொழில்நுட்பம் - இன்ஜின் என்று பார்ப்பதற்கு NTorq சிறந்த ஸ்கூட்டராகத் தெரிகிறது. இதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement