Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீப்பெட்டித் தொழிலாளர்கள் கூலி உயர்வுப் பேச்சுவார்த்தை தோல்வி – தொடர்கிறது வேலைநிறுத்தப் போராட்டம்

அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலி உயர்வை வழங்கிட வலியுறுத்தி, கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழிலாளர்கள்  மற்றும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, தீப்பெட்டித் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார், கழுகுமலை, விளாத்திகுளம், எட்டயபுரம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி மற்றும் நெல்லை மாவட்டம் குருவிகுளம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில், தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்றுவருகிறது. இத் தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களில் 90 சதவிகிதம் பேர் பெண்கள்தான். இவர்களுக்கு, கடந்த 7 ஆண்டுகளாகக் கூலி உயர்வு வழங்கப்படவில்லை.

அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலி உயர்வை பஞ்சப்படியுடன் சேர்த்து வழங்கிட வேண்டும். அத்துடன் சேமநல நிதி, தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு சம்பளச் சீட்டு வழங்கிட வேண்டும். தொழிற்சாலை வளாகத்தில் கேன்டீன், குழந்தைத் தொட்டில், ஓய்வறை, கழிப்பறை அமைத்தல் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழிலாளர்கள் கடந்த 12 நாள்களாகத் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில், கோட்டாச்சியர் அனிதா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தொழிலாளர் நல அலுவலர்கள், தீப்பெட்டித் தொழிலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஏற்கெனவே, 20 சதவிகிதம் உயர்த்தப்பட்டக் கூலியைத் தொழிலாளர்கள் ஏற்காத நிலையில், மீண்டும் தொழிலாளர்கள் கேட்கும் கூலி உயர்வைச் செயல்படுத்துவது தொடர்பாக, வரும் 14-ம் தேதி உற்பத்தியாளர்களுடன் பேசி, 15-ம் தேதி தெரிவிப்பதாகக் கூறினர். பேச்சுவார்த்தையின்போது, கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வெளியில் 600-க்கும் மேற்பட்டத் தீப்பெட்டித் தொழிலாளர்கள் நல்ல முடிவு வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், கூலி உயர்வுபற்றி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், நிர்வாகிகள் கலந்து பேசி, வரும்15-ம் தேதி முடிவு அறிவிப்பதாகக் கூறியதால், தீப்பெட்டித் தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர். இருப்பினும், '15-ம் தேதி எங்கள் கோரிக்கைகளுக்கு முடிவு தெரியும் வரை வேலைநிறுத்தப் போராட்டமும் தொடரும்' என தீப்பெட்டித் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 12 நாள்களாக நடந்துவந்த, வேலைநிறுத்தப் போராட்டத்தினால், தீப்பெட்டி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 15-ம் தேதி வரை தங்களது வேலைநிறுத்தத்தைத் தொடர இருப்பதால், தீப்பெட்டி உற்பத்தி மேலும்  கடுமையாகப் பாதிப்படையும்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement