டார்ச்சரால் 2-வது மனைவி தற்கொலை! 176 நாள்களுக்குப் பின் சிக்கிக்கொண்ட வி.ஏ.ஓ | VAO was arrested for his wife death case

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (13/02/2018)

கடைசி தொடர்பு:08:32 (13/02/2018)

டார்ச்சரால் 2-வது மனைவி தற்கொலை! 176 நாள்களுக்குப் பின் சிக்கிக்கொண்ட வி.ஏ.ஓ

முதல் திருமணத்தை மறைத்து, இரண்டாவதாக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததால் மனமுடைந்து, அந்தப் பெண் தற்கொலைசெய்துகொண்டார். இந்த வழக்கில் தலைமறைவான வி.ஏ.ஓ-வை 176 நாள்களுக்குப்  பிறகு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

                                       

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்துசேர்வாமடம் கிராமம், பெரிய தெருவைச் சேர்ந்தவர் புஷ்பா. இவர், பட்டப்படிப்பு முடித்துவிட்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி படித்துவந்தார். அதேபோல, முத்துசேர்வமடத்தில் வி.ஏ.ஓ-வாகப் பணியாற்றிவந்தார் செல்வராஜ். இவர்களுக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். வி.ஏ.ஒ அலுவலகத்துக்கு புஷ்பா அடிக்கடி வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பழக்கம் காதலாக மாறியிருக்கிறது. புஷ்பாவிடம் திருமணம் ஆகவில்லை என்று  மறைத்து, குடும்பத்தினருக்குத் தெரியாமல் புஷ்பாவைத் திருமணம் செய்துள்ளார் செல்வராஜ்.

                                    

இந்நிலையில், தாலிகட்டிக்கொண்டு மறைமுக வாழ்க்கை வாழ புஷ்பாவுக்குப் பிடிக்கவில்லை. இதை செல்வராஜிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதிக்காத செல்வராஜ், புஷ்பாவை கடுமையாக அடித்து அசிங்கமான வார்த்தையால் திட்டியிருக்கிறார். இதுதொடர்பாக இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்னை இருந்துவந்துள்ளது. மேலும், மனரீதியாகன தொந்தரவும் கொடுத்திருக்கிறார். இதனால் மனமுடைந்த புஷ்பா, கடந்த 5 மாதத்துக்கு முன்பு, கழுத்தில் கிடந்த தாலியை அறுத்துவிட்டு, வீட்டின் அருகில் உள்ள ஒரு முந்திரித் தோப்பில் தனது சேலையால்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

                   

 புஷ்பாவின் தாயார் சுகுணாவதி, மகளின் சாவில் மர்மம் இருப்பதாக மீன்சுருட்டி போலீஸில் புகார் கொடுத்ததின் பேரில், போலீஸார் விசாரித்துவந்தனர். இதைத் தொடர்ந்து, வி.ஏ.ஓ செல்வராஜ் தலைமறைவானார். இவரைக் கைதுசெய்வதற்காக போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடிவந்தனர். வி.ஏ.ஓ. செல்வராஜ், சென்னை குன்றத்தூரில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸார், செல்வராஜைக் கைதுசெய்து, மீன்சுருட்டி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், செல்வராஜை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

                           

இந்த வழக்குத் தொடர்பாக, சென்னையில் இருந்துகொண்டே முன்ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் செல்வராஜ். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், அதைத் தள்ளுபடிசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.