வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (13/02/2018)

கடைசி தொடர்பு:08:09 (13/02/2018)

தூத்துக்குடி கடற்கரையில் இறந்து கரைஒதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள்

தூத்துக்குடி கடற்கரையில், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. அப்பகுதியில் இயங்கிவரும் தனியார் உரத்தொழிற்சாலைதான் இதற்குக் காரணம் என குற்றம் சாட்டுகின்றனர் மீனவர்கள். 

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் உள்ளது, கோவளம் கடற்கரை. இக்கடற்கரைப் பகுதியிலிருந்து 13 நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்துவருகின்றனர். இந்நிலையில், திடீரென கடல் நீரில் மீன்கள் குவியல் குவியலாக இறந்து மிதந்தன. தொடர்ந்து கடல் அலைகளால் கரை ஒதுங்கின. அப்பகுதி மீனவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அப்பகுதியில் உள்ள மீனவர் ஒருவரிடம் பேசினோம், 'சாயங்காலம் 5 மணி இருக்கும், கடலில் மீன்கள் இறந்த நிலையில் மிதக்க ஆரம்பித்தன. கொஞ்ச நேரத்துல மிதக்கும் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிச்சுது. கடற்கரையில் சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில், ஆயிரக்கணக்கான மீன்கள்  ஆங்காங்கே கரையில் கிடந்தன. இக்கடல் பகுதியில் பவளப்பாறைகள் உள்ளன. கரை ஓரத்திலும், இப்பாறைகளுக்கு இடையிலும் இனப்பெருக்கம் செய்துவரும் மூஞ்சான், ஊளி, ஓரா, கீளி  வகை மீன்கள்தான் அதிக அளவில் இறந்து கரை ஒதுங்கின.

இதுக்கு சரியான காரணம் என்னன்னு தெரியலை என்றாலும், இப்பகுதியில் உள்ள தனியார் உரத்தொழிற்சாலையின் கழிவுகள் இந்தப் பகுதியில்தான் கடல்நீருடன் கலக்கிறது. அதோடு, ராட்சத குழாய்மூலம் கடல் நீருக்கு அடியில் ஆலைகளுக்குத் தேவையான ஆயில் கப்பலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது. ஆலையின் கழிவு நீரில் ஏதேனும் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் அல்லது ஆயில் செல்லும் குழாயில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டு, ஆயில் கசிவினாலும் மீன்கள் இறந்திருக்கலாம்' என்றார்.      

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார், தருவைக்குளம், தூத்துக்குடி, முத்தையாபுரம் கோவளம், புன்னக்காயல், வீரபாண்டியன்பட்டினம், காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆலந்தலை, குலசேகரன்பட்டினம், மணப்பாடு என 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை உள்ளடக்கிய நீண்ட கடற்கரைப்பகுதி. இப்பகுதியில் மீன்கள், டால்ஃபின்கள் கரை ஒதுங்குவது வாடிக்கையாகிவருகிறது. இயற்கைப் பருவமாற்றம் தவிர்த்து, தொழிற்சாலைகளின் கழிவுகளால் இவ்வாறு மீன்கள் இறந்து மிதக்கிறதா என்பதை மீன்வளத்துறை மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அதிகாரிகள்தான் விசாரணை நடத்த வேண்டும்.  சரியான காரணம் தெரியாவிட்டால், மீன்களின் இறப்பு தொடர்ந்துகொண்டேதான் இருக்கும் என்கிறார்கள் மீனவர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க