வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/02/2018)

கடைசி தொடர்பு:07:50 (13/02/2018)

இங்கே எல்லாருக்கும் டபுள் ரோல்... அடுத்தடுத்து வெளிவரும் பாரதியார் பல்கலைக்கழக கோல்மால்கள்!

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி, லஞ்சப் புகாரில் சிக்கிய பிறகு, பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு கோல்மால்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, துணைவேந்தர் கணபதிக்கு உதவியாக இருந்தவர்களிடமும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தயாராகிவருகின்றனர். இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் முழுநேர அடிப்படையில் பிஹெச்.டி படித்துவருபவர்களுக்கு, இணைப்புக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Bharathiar University

இதுகுறித்து பல்கலைக்கழக ஊழியர்கள் கூறுகையில், 'ஆங்கிலத் துறையில் எஸ்.ஆனந்தன் மற்றும் தமிழ்த் துறையில் எம்.திருமுருகன், முழுநேர பிஹெச்.டி பயின்றுவருகின்றனர். முழுநேரமாக பிஹெச்.டி பயின்றுவரும் ஒருவர், இணைப்புக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேரமுடியாது. பகுதிநேர அடிப்படையிலேயோ அல்லது பிஹெச்.டி-யை டிஸ்கன்டினியூ செய்துவிட்டுத்தான் பணியில் சேரமுடியும். ஆனால், இந்த இருவரும் பல்கலைக்கழகத்தில் முழுநேரமாகப் பயின்றுகொண்டிருக்கும்போதே, தொண்டாமுத்தூர் இணைப்புக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தனர்.

ஆங்கிலத் துறைத் தலைவராக உள்ள சரவணசெல்வன், சிண்டிகேட் உறுப்பினராக உள்ளார். அதேபோல, தமிழ்த்துறைத் தலைவராக இருக்கும் ஞானசேகரன், பல்கலைக்கழக இயக்குநராகவும் உள்ளார். இவர்கள்தான் செலெக்ஷ்ன் கமிட்டியில் இருந்தனர். இதையடுத்து, அந்த இருவரையும் செலெக்ட் செய்து, கடந்த 23.9.2017-ம் தேதி, தொகுப்பூதிய அடிப்படையில் பணிக்கு சேர்க்கப்பட்டனர்.

ஆனால், பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி-யை டிஸ்கன்டினியூ செய்யவில்லை. ஆராய்ச்சிக்காக வாங்கப்பட்டுவந்த உதவித்தொகையையும் பெற்றுக்கொண்டு, அந்தக் கல்லூரியிலும் பணியில் இருந்து சம்பளம் பெற்றுள்ளனர். இது மிகவும் தவறு. தற்போது, அவர்களை பணியில் இருக்க வேண்டாம் என்றுகூறி, மீண்டும் பல்கலைக்கழகத்துக்கே அழைத்துவிட்டனர். மேலும், அவர்களைப் பகுதி நேர பிஹெச்.டி-யாக மாற்றவும் முயற்சி நடந்துவருகிறது' என்றனர்.

Saravana Selvanஇதுகுறித்த சரவணசெல்வனிடம் பேசினோம், “ஆங்கிலத் துறைக்கு டிமேண்ட் அதிகம். ஆனால், அப்ளை செய்தவர்கள் மிகவும் குறைவு. கஷ்டப்படும் மாணவர்கள், வாய்ப்புக் கேட்டுவரும்போது, அதை நாங்கள் மறுக்க முடியாது. ஆனந்தன், பிஹெச்.டி-யை டிஸ்கன்டினியூ செய்துவிட்டுத்தான், அங்கு பணிக்குச் சேர்ந்தார். அதேபோல, ஃபெலோஷிப்பும் வேண்டாம் என்று கடிதம் எழுதிக்கொடுத்துள்ளார். மேலும், அங்கு பணிசெய்ய விருப்பமில்லை என்று கூறி கடிதம் எழுதிவிட்டு, தற்போது இங்கு மீண்டும் பிஹெச்.டி தொடர்கின்றனர்' என்றார்.

இதுதொடர்பாக கருத்துக் கேட்க, ஞானசேகரனைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.