`ஜேசிபி வைத்துக் கடையை அப்புறப்படுத்துவோம்' என்று மிரட்டுகிறார்கள் - கலங்கும் சிறு கடை வியாபாரிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகள் தீ பிடித்து எரிந்த சம்பவத்துக்குப் பிறகு, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் கடைகளை அப்புறப்படுத்தச் சொல்லி இந்து அறநிலையத்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, தாயமங்களம் முத்துமாரியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள கடைகளை  கோயில் நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தச் சொல்வதாகவும், அதற்கு அவகாசம் கொடுக்க வேண்டுமென்றும் சிறு கடை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்கள்.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவில் அமைந்துள்ளது, தாயமங்களம் முத்துமாரியம்மன் கோயில். இந்தக் கோயிலை நம்பி கோயிலுக்கு வெளியே நூற்றுக்கும் அதிகமான கடைகள் இயங்கிவருகின்றன. பங்குனி மாதத்தில் நடக்கும் இந்தக் கோயில் திருவிழாவில், பல லட்சம் பக்தர்கள் கூடிக் கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு வருமானம் வரும் கோயில் இது.

சிறு கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பேசிய ராஜேந்திரன்...

'கோயிலுக்கு வெளியே சிறு சிறு கடைகளை நாங்கள் நடத்திவருகிறோம். அதில், எந்தக் கடைக்கும் மின் இணைப்பு வசதி கிடையாது. எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களையும் வைத்துத் தொழில் நடத்தவில்லை. இந்தக் கடைகளை நம்பித்தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். முத்துமாரியம்மன் கோயில் டிரஸ்டி, ஜேசிபி இயந்திரத்தைக்கொண்டு கடையை அப்புறப்படுத்துவேன் என்று எச்சரிக்கிறார். உடனடியாகக் கடைகளை அப்புறப்படுத்தச் சொன்னால் எப்படி முடியும்? இன்னும் ஒருமாத காலம் அவகாசம் தாருங்கள் எனக் கேட்டிருக்கிறோம்' என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!