வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (13/02/2018)

கடைசி தொடர்பு:13:21 (13/02/2018)

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தி.மு.க-வின் ரூ.1 கோடி - அமைச்சரின் பேச்சும் முரசொலியின் வீச்சும்! 

மெரிக்க ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக தி.மு.க. அறிவித்த ஒரு கோடி ரூபாய் வந்துசேரவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார்.  அதற்கு தி.மு.க. தரப்பில் காட்டமாக விமர்சனம் செய்துள்ளனர். 

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்தியவியல் தொடர்பான துறைகள் இருந்தாலும், செம்மொழியான தமிழுக்கு உரிய இடம் இல்லாத நிலை நீடித்துவருகிறது. இதை மாற்றியமைக்கும் வகையில் அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன் ஆகியோரின் முன்முயற்சியில், ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பதற்கான தனி குழு அமைக்கப்பட்டது. வெளிநாட்டில் மட்டுமின்றி தமிழகத்திலும் பலரும் தன்னார்வமாக நன்கொடை அளித்துவருகின்றனர். தமிழக அரசின் சார்பில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நன்கொடையை வழங்கவேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் பலவும் வலியுறுத்தின. தமிழ் இருக்கையானது எப்படி அமையவேண்டும் என்பது குறித்தும் தமிழ் ஆய்வாளர்கள் கருத்துகளை முன்வைத்தனர். 

அமெரிக்கத் தமிழர்கள் தரப்பிலும் அமைச்சர் பாண்டியராஜன் மூலம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. அதையடுத்துக் கடந்த அக்டோபர் 27-ம் தேதியன்று, தமிழக அரசின் சார்பில் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  மதுரை, திருப்பரங்குன்றம் பகுதி, ஆர்.வி.பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் இராமசாமி, தன் பணியிறுதிக் கால பணப்பயன்கள் மூலமாகக் கிடைத்த ரூ.5 இலட்சத்தை, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் வேள்நம்பி, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து நன்கொடை வேண்டுகோளை முன்வைத்தார். அதன்படி தி.க தலைவர் கி.வீரமணி, ரூ.5 இலட்சம் வழங்கினார்.  அதையடுத்து, தி.மு.க-வின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என தி.மு.க-வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ம் தேதி அறிவித்தார். மறுநாளன்று, தமிழ் இருக்கைக்கான இந்தியக் குழுவின் பொறுப்பாளரான முனைவர் ஆறுமுகத்திடம் முறைப்படி தி.மு.க-வின் நன்கொடையை ஸ்டாலின் வழங்கினார். 

ஹார்வர்டு தமிழ் இருக்கை

ஆனால், அப்படி ஒரு தகவல்தான் வந்துள்ளது; தி.மு.க-வின் நிதி இன்னும் வந்துசேரவில்லை என நேற்று சென்னையில் நடந்த அரசு நிகழ்ச்சியின்போது அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். அமைச்சரின் இந்த பதிலால் பல தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். 

தமிழ் இருக்கை அமைப்பதற்கான குழுவின் பொறுப்பாளரிடம்  திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்பட்டதற்கு ஆதாரமாகப் படத்தை வெளியிட்டிருந்தும் அமைச்சர் இப்படிப் பேசியது சரியாகுமா என தி.மு.க-வினரும் தமிழ் உணர்வாளர்களும் அதிருப்தி அடைந்தனர். தமிழ் இருக்கைக்கான நன்கொடையை அரசு மூலமாக மட்டுமே அளிக்கவேண்டும் என்பதாக அமைச்சர் கூறவருகிறார் என்றே கருத இடமுண்டு. 

அமைச்சர் விளக்கம் ஒரு பக்கம் இருக்க, அதற்கு தி.மு.க-வின் நாளேடான முரசொலியில், இன்று, அக்கட்சியின் தலைமைக்கழகம் பெயரில் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. 

“ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கைக்காக தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஓர் அமைப்பின் மூலமும் ரிசர்வ் வங்கி அனுமதியோடு வங்கிக் காசோலை மூலமும் நிதி அனுப்ப வழியுள்ளது. தமிழ் இருக்கைக்காக இந்தியாவில் நிதி திரட்டும் ஆறுமுகத்திடம் தி.மு.க. சார்பில் பிப். 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் வழங்கினார். இதற்காக ஆறுமுகம் நன்றி தெரிவித்து பேட்டியும் அளித்துள்ளார். இதைப் பற்றி எதுவுமே தெரியாத தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக, ‘ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக தி.மு.க. சார்பில் நிதி எதுவும் தரவில்லை’ என்று தெரிவித்திருக்கிறார். ஊரறிந்த உண்மையை ஒருபோதும் யாராலும் மறைக்கமுடியாது” என்று தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழ் இருக்கையின் இந்தியப் பொறுப்பாளர் முனைவர் ஆறுமுகத்தைத் தொடர்புகொண்டபோது, சில மணி நேரத்துக்கு முன்னர்தான் அவர் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்று இறங்கியிருந்தார். 

தொடர்புகொண்டதும் அழைப்பை ஏற்றவர், ” தமிழுக்காக யார் நன்கொடை தந்தாலும் நன்றியுடன் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறோம். தமிழ்நாட்டு அரசின் மூலமாகவும் தனியாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு நேரடியாகவும் இரு வகைகளில் நன்கொடையை அளிக்கமுடியும். தி.மு.க. சார்பில் நன்கொடையை அளிப்பதாகக் கூறினார்கள். சம்பிரதாயப்படி நன்கொடைக் காசோலையைப் பெற்றுக்கொண்டேன். நன்கொடை வழங்குவதற்கான இரண்டு முறைகளை எடுத்துச்சொன்னேன். நேரடியாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்திடம் நன்கொடை வழங்குவதற்கான நடைமுறைகளை தி.மு.க-வின் சார்பில் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி அந்த நன்கொடை வழங்கப்படுகிறது. இதில் யாரும் யாரையும் குறைசொல்ல ஒன்றுமில்லை. அரசாங்கத்திடம் கொடுக்காததால் அமைச்சருக்குத் தெரியாமல் இருக்கலாம்; அவர் சொன்னதில் தவறு இல்லை. தி.மு.க. சொல்வதிலும் எந்தத் தவறும் இல்லை. சமகாலத்தில் மொழிக்காக - சாதி, மதம் பார்க்காமல், தமிழர்கள் ஒன்றுபட்டுச் செய்யும் நல்ல செயல், இது. யாருக்கும் எந்த வருத்தமும் இல்லாமல் இந்தப் பணியை நிறைவுசெய்யவேண்டும்” என்றார், முனைவர் ஆறுமுகம் தெளிவாக.