’இந்த ஆர்ச் கட்டினால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாம்!’ - அலங்கார நுழைவுவாயிலின் சோகக் கதை

வருவோரை வரவேற்கும் நுழைவுவாயில், சென்டிமென்ட் பிரச்னையில் சிக்கி, கிடப்பில் கிடக்கிறது.  

 

திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற முருகன் கோயில், எண்கண் கிராமத்தில் உள்ளது.  திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எண்கண் ஊருக்குச் செல்லும் வழியில் அலங்கார நுழைவுவாயில் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாகப் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது.  

அலங்கார நுழைவுவாயில் ஆரம்பகட்டத்தை விட்டுத் தாண்டாமல் கிடப்பது ஏன் என்று எண்கண் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெற்றிச்செல்வனிடம் கேட்டோம், 'அது ஒரு சோகக் கதை' என்று பெருமூச்சு விட்டவாறே நுழைவுவாயில் சென்டிமென்ட் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

'அந்த இடத்தில் பழைய ஆர்ச் ஒன்று இருந்தது. அது, எதிர்பாராமல் டிராக்டர் ஒன்று மோதி இடிந்துவிழுந்து விபத்து ஏற்பட்டதில், டிராக்டர் டிரைவர் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். அதன்பிறகு, சில காலம் இடைவெளிவிட்டு புதிய ஆர்ச் கட்ட பூமி பூஜை நடந்தது.  அப்போது, அந்தப் பூஜையில் கலந்துகொண்ட அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன், திடீரென மயக்கம்போட்டு கீழே விழுந்தவர் இறந்துபோனார். அது, கிராமத்தினருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.  இப்படி ஆர்ச் கட்டும்போது ஆரம்பமே அபசகுணமாக இரண்டு உயிர்கள் பலியானதால், அதைக் கட்டவேண்டுமென்று யாருமே எண்ணவில்லை.  

இந்நிலையில், கோயிலுக்கு சாமி கும்பிட வந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், 'ஆர்ச்சை நான் கட்டித்தருகிறேன்' என்று விட்டுப்போன பணிகளை ஆரம்பித்தார்.  அவருக்கும் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், ஆர்ச் பணி அத்தோடு நிறுத்தப்பட்டது.  அன்று முதல் இன்று வரை அப்படியே கிடக்கும் ஆர்ச், தற்போது தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியில் அகற்றப்படும் நிலைக்கு ஆளாகிவிட்டது.  எனவே, இனி ஆர்ச் பற்றி யாரும் கவலைப்பட தேவையிருக்காது' என்று முடித்தார்.  
  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!