வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (13/02/2018)

கடைசி தொடர்பு:19:14 (13/02/2018)

என்கவுன்டர் பீதி: 8 நாள் கண்ணாமூச்சி விளையாடிய ரவுடி பினு போலீஸிடம் சரண்

பல்வேறு கொலை மற்றும் ஆள்கடத்தல் வழக்கில் தேடப்பட்டுவந்த பிரபல ரவுடி பினு, அம்பத்தூர் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளார். 

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர், பிரபல ரவுடி பினு. இவர்மீது சூளைமேடு, வடபழனி உள்ளிட்ட சென்னை காவல் நிலையங்களில் பல்வேறு கொலை மற்றும் ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று தலைமறைவாக இருந்துவந்தார். இதனிடையே, கடந்த 6-ம் தேதி மாங்காடு பகுதியில் பினுவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சென்னையின் முக்கிய ரவுடிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், கொண்டாட்ட இடத்துக்கு விரைந்து சென்று 72 பேரை துப்பாக்கி முனையில் கைதுசெய்தனர். சினிமா காட்சிகளையே விஞ்சும் அளவுக்கு ஒரே இடத்தில் 72 ரவுடிகள் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டது, சென்னையில் பரபரப்பை உண்டாக்கியது. இருப்பினும் பிரபல ரவுடி பினு உள்ளிட்டோர் தப்பிச்சென்றனர். 

இதன்பின்னர், இவர்களைத் தேடும் பணியைத் தமிழகக் காவல்துறை முடுக்கிவிட்டது. நான்கு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் போலீஸார் தேடிவந்தனர். மேலும், பினுவை சுட்டுப் பிடிக்கவும் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் ரவுடி பினு, அம்பத்தூர் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளார். 8 நாள் தலைமறைவுக்குப் பின்னர், அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்வரன் முன்னிலையில் பினு சரணடைந்துள்ளார். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். பின்னர், பல்வேறு வழக்குகள்குறித்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்துவர் எனத்தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க