வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (13/02/2018)

கடைசி தொடர்பு:11:51 (14/03/2018)

`நீங்க கவலைப்படாமல் தூங்குங்க' - டிரைவரின் வாக்கை நம்பிய சுற்றுலாப் பயணிகளுக்கு நடந்த சோகம்

புதுக்கோட்டை அருகே இன்று அதிகாலை நடந்த விபத்தில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 12 பேர்  காயமடைந்தார்கள்.

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 16 பேர், வேன் ஒன்றில் ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்தனர். இன்று அதிகாலை, அந்த வேன் புதுக்கோட்டை அருகே உள்ள அகரப்பட்டி வந்தபோது, ஓட்டுநரின் காட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அதைக் கண்டு மற்ற சுற்றுலாப் பயணிகள் கதறினர். ஓட்டுநரைக் கடிந்துகொண்டனர். காரணம், வேனை ஓட்டிவந்தபோது அவர் கடுமையான சோர்வில் இருந்திருக்கிறார். அதை முன்பே அறிந்துகொண்டவர்கள், சாலை ஓரமாக நிறுத்தி அரைமணிநேரம் ஓய்வெடுத்துவிட்டுப் பிறகு ஓட்டுங்கள் என்று கூறியி ருக்கிறார்கள். அதை அந்த டிரைவர் அலட்சியப்படுத்தியதோடு, 'டிரைவிங்கில் பல வருடங்களாக அனுபவம் எனக்கு உண்டு. நீங்கள் கவலைப்படாமல் தூங்குங்க. நான் உங்களைப் பத்திரமா ராமேஸ்வரத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறேன். அங்கு நான் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.

அவர், அவ்வளவு உறுதியாகக் கூறியதைப் பயணிகள் ஆரம்பத்தில் நம்பினாலும் அவர் ஓட்டிச்சென்ற விதத்தைப் பார்த்து தங்களுக்குள் பேசி ஒரு முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி, இரண்டு பேர் ஓட்டுநர் அருகில் அமர்ந்து, இரவு முழுக்க டிரைவருக்குத் தூக்கம் வந்துவிடக் கூடாது என்ற பயத்திலேயே பேச்சுக்கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். அதிகாலை நேரத்தில் அவர்களும் தூங்கிவிட்டார்கள். வேன், அகரம்பட்டி அருகில் வந்ததும் டிரைவர் சில கணம் அசதியில் தூங்கிவிட்டார். அந்த நேரத்தில், வேன் பைபாஸ் சாலையைவிட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்திருக்கிறது. இதைச் சொல்லி அந்தப் பயணிகள் டிரைவரைக் கடிந்துகொண்டிருந்தார்கள். அந்த டிரைவர் பெயர், நித்யானந்தம். சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர்.

விபத்து குறித்து தகவலறிந்த திருக்கோகர்ணம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்த 12 பேரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் . காயமடைந்த அனைவரும் சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, உயிரை இழந்த, காயமடைந்த உறவினர்களுக்கு போலீஸார் உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்கான காரணம் என்று போலீஸார் கூறினர். மேலும் விபத்து குறித்த கூடுதல் விசாரணையையும் போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.