வெளியிடப்பட்ட நேரம்: 11:39 (13/02/2018)

கடைசி தொடர்பு:11:39 (13/02/2018)

முக்கிய கோரிக்கையுடன் முதல்வரைச் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

ஸ்டாலின்

அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் கட்டணத்தை 20.1.2018 அன்று திடீரென்று ரூ.3,600 கோடி அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தி.மு.க தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் 27.1.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டமும் 29.1.2018 அன்று சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தினர். இந்நிலையில், உயர்த்தப்பட்ட கட்டணத்தில் ரூ.1 முதல் 4 ரூபாய் வரை தமிழக அரசு குறைத்தது. இந்நிலையில், 6.2.2018 அன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை தி.மு.க கூட்டியது. அதில், ''உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெற வேண்டும்; போக்குவரத்துத் தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள்மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்'' என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பிப்ரவரி 13-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிடையில் போக்குவரத்துக் கழக நிர்வாகத்க்ச் சீரமைக்க ஆலோசனை வழங்க ஒரு குழுவை தி.மு.க அமைத்திருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழு தனது அறிக்கையைத் தயாரித்து ஸ்டாலினிடம் கொடுத்துள்ளது. அதை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று நேரில் கொடுக்கிறார். அந்தச் சந்திப்பு இன்று மதியம் 12 மணிக்கு கோட்டையில் நடைபெறுகிறது. ''தொழிலாளர்கள் சம்பள உயர்வு, போக்குவரத்துக் கழகங்களைச் சீரமைப்பது, நிர்வாகத்தை சீர்படுத்துவது, நிதி நிர்வாகம்'' என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள். பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் சந்திப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க