வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (13/02/2018)

கடைசி தொடர்பு:16:42 (13/02/2018)

`தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் பேச வந்துள்ளேன்' - பிரச்னையைக் கூறிய ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள்

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2-வது நாளாக வெயிலிலும் மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

''தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் நச்சுப் புகையால் மூச்சுத்திணறல் முதல் புற்றுநோய் வரை பல நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறோம். இந்நிலையில் சிப்காட் வளாகத்தில் தனது 2-வது ஆலை விரிவாக்கத்திற்காகப் பணிகளைச் செய்து வருகிறது. எனவே, விரிவாக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது. நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்'' என்பதை வலியுறுத்தி  நேற்று காலை தொடங்கிய குமரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் 2-வது நாளாக  இன்றும்  தொடர்ந்து நீடித்து வருகிறது. கடும் வெயிலிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள் ஊர்மக்கள். 

நேற்று மதியம் வரை மட்டுமே போராட்டம் நடத்திட காவல்துறை அனுமதி அளித்திருந்த நிலையில், முடிவு தெரியும் வரை போராட்டம் தொடரும் எனக்கூறி தூத்துக்குடி எம்.ஜி.ஆர். பூங்கா முன்பு நடந்து வருகிறது போராட்டம். சப்-கலெக்டர் மற்றும் டி.எஸ்.பி, ஊர்மக்களிடம் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மக்களைத் தவிர அரசியல் கட்சிகள் எதுவும் வரக்கூடாது எனக் காவல்துறையினர் கடுமையாக எச்சரித்தனர். 

தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ. கீதாஜீவன் போராட்டக் களத்துக்கு வந்து மக்களிடம் பேசினார். "அரசியல்வாதியாக வரவில்லை. தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் மக்களின் பிரச்னைக்காகப் பேச வந்துள்ளேன்" எனக் கூறியவுடன், தங்களது கோரிக்கைகளை கீதாஜீவனிடம் கூறினர். "ஆட்சியரிடம் இப்பிரச்னை குறித்து பேசுகிறேன்" எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். 

போராட்டத்தில் தங்கள்  பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் அவர்களையும் அமரவைத்துப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் அமர்ந்தும்  பூங்காவிற்குள் விளையாடியும் வருகின்றனர் குழந்தைகள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் போராட்டம் வலுத்து வரும் நிலையில், போராட்டக்காரர்களை காவல்துறை கைது செய்து அழைத்து சென்றது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க