வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (13/02/2018)

கடைசி தொடர்பு:14:00 (13/02/2018)

அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து புறக்கணிக்கும் மீனவரணி கூட்டம் 

 மீனவரணி ஆலோசனைக் கூட்டம்

மீனவரணி ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்காதது அ.தி.மு.க-வினரை அதிருப்தியடைய வைத்துள்ளது. 

 ஜெயலலிதா பிறந்தநாள் விழா தொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மீனவர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநிலச் செயலாளர் நீலாங்கரை முனுசாமி தலைமை வகித்துப் பேசுகையில், "ஜெயலலிதா இல்லாத இந்தச் சமயத்தில் அவரது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தவேண்டும். குறிப்பாக ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும். கிழக்கு கடற்கரை சாலைக்கு ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டவேண்டும். சட்டசபையில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டுள்ளது வரலாற்றுக்குரியது" என்றார். 

 இந்தக் கூட்டத்தில், பேசிய கடலூர் நிர்வாகி, அ.தி.மு.க-வில் மீனவரணியைத் துறை அமைச்சர்கூட கண்டுகொள்வதில்லை... இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குக்கூட அமைச்சர் வரவில்லை என்றார் காட்டமாக. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன்உசேன் மற்றும் நிர்வாகிகள் சின்னய்யா,ஜெ.எம்.பஷீர் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மீனவரணி சார்பில் நடத்தப்படும் கூட்டங்களை அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து புறக்கணிப்பதாக அந்த அணியினர் குற்றம்சாட்டுகின்றனர். 

 இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், ''முக்கிய அலுவல் காரணமாக ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்கவில்லை. மீனவரணி கூட்டத்தைத் தொடர்ந்து புறக்கணிப்பதாகச் சொல்வது தவறு. மீனவர் நலன் தொடர்பாக பல ஆலோசனைக் கூட்டங்கள் அமைச்சர் தலைமையில் நடந்துள்ளன" என்றனர்.