வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (13/02/2018)

கடைசி தொடர்பு:15:42 (28/06/2018)

அகில இந்திய அளவில் '5s' விருது பெறும் முதல் அரசுப் பள்ளி!

ஜப்பான் நாட்டில் பின்பற்றப்படும் மிக நேர்த்தியான வழிமுறைகளைச் சிறப்பாகச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு, '5 எஸ்' விருதை QUALITY CIRCLE FORUM OF INDIA, HYDERABAD வழங்கிக் கெளரவிக்கிறது. இந்த பெருமைமிக்க விருதை, அகில இந்திய அளவில் பெறும் முதல் அரசு தொடக்கப்பள்ளி என்ற பெருமையைப் பெற்றுள்ளது, க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. தமிழகத்தில் நான்கு தனியார் பள்ளிகள் மட்டுமே இவ்விருதைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

QUALITY CIRCLE FORUM OF INDIA, HYDERABAD அமைப்பின் தேசிய கருத்தரங்கம், சத்தியமங்கலத்தில் உள்ள பன்னாரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்றது. விருதை, இயக்குநர் டி.கே.ஸ்ரீவஸ்தவா வழங்கினார். ஜப்பான் நாட்டில், ஒவ்வொரு வீட்டிலும் அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில், அவர்கள் பின்பற்றும் வழிமுறைகளை இந்தியாவில் சிறப்பாகப் பின்பற்றும் நிறுவனங்களுக்கு  5S சான்றிதழ் வழங்க  ஹைதராபாத்தைச் சேர்ந்த QUALITY CIRCLE FORUM OF INDIA   என்ற நிறுவனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் டி.கே.ஸ்ரீவத்சவா தலைமையில், கோவை சாப்டர் இயக்குநர்கள் சங்கரசுப்ரமணியன், மாரிமுத்து, நாராயணன் ஆகியோர் அடங்கிய குழு, கடந்த ஜனவரி 22-ம் தேதி, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியை ஆய்வுசெய்து, இச்சான்றினைப் பெறுவதற்கான தகுதியுள்ளது என அறிவித்தனர். ஏற்கெனவே, இப்பள்ளி சர்வதேச தர நிர்ணயச் சான்றினை ( ISO 9001 : 2015 ) கடந்த 2016-ம் ஆண்டு பெற்றுள்ளது.

5S  என்பதற்கு ஜப்பானிய மொழியில் SEIRI , SEITON, SEISO, SEIKETSU,SHITSUKE  என்பதாகும். சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுவதில் தொடங்கி, பள்ளி வளாகத் தூய்மை, எடுத்த பொருளை திரும்ப அதே இடத்தில் வைத்தல், எந்த இடத்திலும் யாருடைய உதவியும் இன்றி தேவைப்படும் பொருளை எடுத்தல், 30 விநாடிகளுக்கு மிகாமல் தேவைப்படும் பொருள்களைக் கண்டறிதல் உள்பட நூற்றுக்கணக்கான செயல் திட்டங்களை உள்ளடக்கியது இந்த 5 எஸ்.

பள்ளியில் பின்பற்றப்படுவதோடு மட்டுமன்றி, முதல் கட்டமாக 10 குழந்தைகளின் வீடுகளிலும் 5 எஸ் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அடுத்த கல்வி ஆண்டில், பள்ளியில் பயிலும் அனைத்துக் குழந்தைகளின் வீடுகளிலும் பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பின்பற்றுவதற்குக் கடுமையான விதிமுறைகளை உள்ளடக்கியது இந்த 5S சான்றிதழ். பெரும் முதலீட்டில் இயங்கும்  தங்களின் பணபலத்தையும் , நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஆள் பலத்தையும் கொண்டு செயல்படுத்திப் பெறக்கூடிய  இச்சான்றிதழை முழுக்க முழுக்க பெற்றோர்கள், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பொது மக்கள் ஒத்துழைப்புடன் அரசுப்பள்ளியான இப்பள்ளி செயல்படுத்திச் சான்று பெற்றுள்ளது சிறப்பு.

இதைத் தவிர, இந்தியா முழுவதிலுமிருந்து 70-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் கலந்துகொண்ட இந்த அகில இந்திய மாநாட்டில் வழங்கப்பட்ட சிறப்பு விருதுகள் இரண்டில் ஒன்று, இப்பள்ளித் தலைமை ஆசிரியருக்கு நேற்று வழங்கப்பட்டது. மேலும், பள்ளியில் '5எஸ்' நடைமுறைகளை முன்னெடுத்துச் சென்றமைக்காக ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.