`வங்கி விளம்பரம் தவறான செய்தி' - கவிதாலயா நிறுவனம் விளக்கம்!

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா புரொடக்சன்ஸ். அக்னி சாட்சி, புன்னகை மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளது கவிதாலயா நிறுவனம். 

இந்தநிலையில் UCO வங்கியில் வாங்கிய 1.36 கோடி கடன் பணம் செலுத்த முடியாமல்போனதால், சென்னை அபிராமபுரத்தில் உள்ள கவிதாலயா புரொடக்சன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடங்கள் மற்றும் வீடு உள்ளிட்டவை ஏலத்துக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியது. இதற்கான அறிவிப்பு ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் நேற்றுமுன்தினம் (11.2.2018) வெளியானது. இந்தநிலையில், இந்தச் செய்திக்கு கவிதாலயா நிறுவனம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில், "கவிதாலயா நிறுவனத்தின் வீடு, மற்றும் அலுவலகம் ஏலம் விடப்படுவதாக வந்திருக்கும் பத்திரிகை செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கடந்த 2010-ம் ஆண்டு டிவி தொடர் தயாரிப்புக்காக அரசுடமை வங்கி ஒன்றில் குடும்பத்தினரின் வேறு சொத்துகளை அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டது. பின்னர் 2015-ல் தயாரிப்புகளை நிறுத்திய பிறகு, முதலும் வட்டியும் சேர்த்து கணிசமான தொகை செலுத்தப்பட்டுவிட்டது. எனினும் மீதமுள்ள கடன் தொகையைச் செலுத்துவதற்காக வங்கியுடன் சட்டரீதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சமயத்தில் வெளியான வங்கி விளம்பரத்தைப் பார்த்து கவிதாலயாவின் சொத்துகள் ஏலத்துக்கு வந்துவிட்டன என்று தவறான செய்தி பரவிவருகிறது. இது முற்றிலும் உண்மையில்லை. எங்கள் மீது அன்பு கொண்டவர்கள் இந்தத் தவறான செய்தியைக் கண்டு கலக்கமடைய வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!