`வருத்தத்தோடு வெளியே வந்தேன்' - மீனாட்சியம்மன் கோயிலைப் பார்வையிட்ட பின் வைகோ பேட்டி | Vaiko inspects Madurai Meenatchi amman temple fire accident spot

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (13/02/2018)

கடைசி தொடர்பு:17:50 (13/02/2018)

`வருத்தத்தோடு வெளியே வந்தேன்' - மீனாட்சியம்மன் கோயிலைப் பார்வையிட்ட பின் வைகோ பேட்டி

பேருந்துக்கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க சார்பில் மதுரையில் கண்டன பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்துக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்குகிறார். அதற்காக வைகோ விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். இந்நிலையில் தீ விபத்தில் சேதமான மதுரை மீனாட்சியம்மன் கோயிலை வைகோ பார்வையிட்டார்.

பிப்ரவரி 2-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிழக்குக் கோபுர வாசலில் வீர வசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு மண்டபத்தின் மேற்கூரையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது பல பொருள்கள் சேதமாகின. அரசியல் தலைவர்கள் பலர், மீனாட்சி அம்மன் கோயிலைப் பார்வையிட்டுச் சென்றுள்ள நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று கோயிலைப் பார்வையிட வந்தார். அப்போது கோயிலுக்குள் நுழையும் முன் அவருக்கு விருப்பமான கறுப்பு நிறத் துண்டைக் கழட்டி தொண்டர்களிடம் கொடுத்த பின்னர் கோயிலுக்குள் வைகோ நுழைந்தார். 'நாம் திராவிடக் கட்சிகள் என்றாலும், இதுபோன்ற விஷயங்களில் சற்று சமரசம் செய்துகொள்ள வேண்டும்' எனத் தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ''உலகத்தில் எந்த நாட்டிலும் நம் ஆலயங்களில் உள்ளவைபோல சிற்பங்கள் கிடையாது.

வீர வசுந்தராயர் மண்டபம் தீப்பிடித்ததில் உலககெங்கும் உள்ள தமிழர்கள் வருத்தத்தில் உள்ளனர். உள்ளே உள்ள கடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும். எந்தக் கோயில்களிலும் உள்ளே கடைகள் வைக்கக் கூடாது. அர்ச்சனை பொருள்கள் எல்லாம் வெளியே வைத்து வியாபாரம் செய்ய வேண்டும். மிகுந்த வருத்தத்தோடு பார்வையிட்டு வெளியே வந்தேன். நல்ல வேலை ஆயிரங்கால் மண்டபம் சேதம் அடையவில்லை; மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கடைகள் அனைத்தும் நீக்கும்போது 1,000 குடும்பங்கள் பாதிக்கத்தான் செய்யும். அதற்காக பழைமை வாய்ந்த கோயிலை நாம் விட்டுக்கொடுக்க முடியாது'' என்றார்.

திராவிடக் கட்சிகள் மீனாட்சியம்மன் கோயில் பிரச்னையில் வாய் திறக்காமல் உள்ளது என நேற்று தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். இந்நிலையில் வைகோ பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது