வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (13/02/2018)

கடைசி தொடர்பு:17:36 (13/02/2018)

கோமாவில் மகன்... பார்வையற்ற மனைவி... அடகுக் கடைக்காரரால் கண்ணீர்வடிக்கும் மேஸ்திரி

அடகு கடைக்காரரால் பாதிக்கப்பட்ட குடும்பம்


"எங்க ஊரில் உள்ள அடகுக் கடைக்காரரிடம் ரூ.16,000-க்கு மோதிரத்தை அடகு வைத்தேன். அதற்கு ரூ.22,000-க்கும் மேல் வட்டி கட்டியும் இன்னும் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்" என்று சேலத்தைச் சேர்ந்த மேஸ்திரி ராஜப்பா கண்ணீருடன் கூறினார்.

இதுபற்றி ராஜப்பா கூறுகையில், ''என் மனைவி பெயர் மாதம்மாள். எங்களுக்கு கவிதா, அனிதா என இரண்டு மகள்களும் ஜெகதீசன் என ஒரு மகனும் இருக்கிறார்கள். நாங்கள் மேட்டூர் மாதையன்குட்டை பகுதியில் குடியிருக்கிறோம். என் பையன் ஜெகதீசன் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு சென்டரிங் வேலை செய்துகொண்டிருந்தான். எங்களுக்குத் தெரியாமல் திருட்டு வேலையும் செய்திருக்கிறார். எங்க ஊரில் இரண்டு கோஷ்டிகளாகச் சண்டை வந்து என் மகனின் தலையில் அடித்துவிட்டார்கள். இதனால் அவன் சுயநினைவு இழந்துவிட்டான். 3 வருடமாக கோமா நிலையில் கை, கால்கள் செயலிழந்து இயற்கை உபாதைகளைக்கூட படுத்த படுக்கையிலேயே போய்விடுவான். கண்கள் விழித்துக்கொண்டே இருப்பான். கண்களில் இருந்து அவ்வப்போது கண்ணீர் வரும். பேச முடியாது. தற்போது அவனுக்கு 27 வயதாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கலெக்டரிடம் கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்டும் கொடுக்கவில்லை.

வட்டிக்குப் பணம் வாங்கி தலையில் ஆபரேஷன் செய்தோம். அதன் பிறகு தலை கூம்புபோல வளர்ந்து கொண்டு இருக்கிறது. தலையைத் தொட்டால் கொழ கொழவென்று உள்ளே போகிறது. மருத்துவர்கள் இன்னும் சில வருடங்களில் இறந்துவிடுவான் என்று சொல்கிறார்கள். என்னுடைய இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. என் மனைவிக்கு கண்கள் தெரியாது. நான் கட்டட மேஸ்திரியாக வேலை பார்க்கிறேன். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். குழம்பு சாதம் சாப்பிட்டுகூட 20 நாள்களுக்கும்மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் எங்க ஊரில் உள்ள ஆறுமுகத்திடம் ரூ.16,000-த்துக்கு மோதிரத்தை அடகு வைத்தேன். அதற்காக ரூ.22,000-க்கும் மேல் வட்டி கட்டியும் இன்னும் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்'' என்று கண்ணீர் வடித்தார்.

இதுபற்றி அடகுக் கடை ஆறுமுகத்திடம் கேட்டதற்கு, ''எனக்கும் மனிதநேயம் இருக்கிறது. அவுங்க கொடுக்க வேண்டிய பணத்தில் இரண்டாயிரம், மூவாயிரம் குறைத்துக்கொண்டு கொடுத்தால்கூட வாங்கிக்கொள்வேன். அவுங்க என்னை அசிங்கப்படுத்துவதால் முழுத்தொகையும் கேட்கிறேன்'' என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க