வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (13/02/2018)

கடைசி தொடர்பு:18:31 (13/02/2018)

இனி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் மதுரை மீனாட்சி! - அதிரடி நடவடிக்கைகள் சொல்வது என்ன?

மிக மோசமான சம்பவம் ஒன்று நடந்த பின்புதான் நம்மூரில் பெரிய அளவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதற்கு மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்துக்குப் பின் நடந்து வரும் சம்பவங்களே உதாரணம். நீண்டகாலமாக காலி செய்யப்பட முடியாமல் இருந்த வீரவசந்தராயர் மண்டத்திலுள்ள கடைகள் காலி செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து கோயிலின் மற்ற பகுதிகளிலுள்ள கடைகளும் காலி செய்யப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதுமுள்ள பெருங்கோயில்களிலும் இதேபோன்று கடைகளை காலிசெய்ய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மீனாட்சியம்மன் கோயிலுக்குத் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் மத்தியப் பாதுகாப்புப்படையிடம் பாதுகாக்கும் பணியை ஒப்படைக்க வேண்டுமென்றும் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கும் செல்போன், பிளாஸ்டிக் உட்பட பல பொருள்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சேதமான பகுதிகளை ஆய்வு செய்யவும், சீரமைக்கவும் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில்

  தினமும் அரசியல் கட்சி நிர்வாகிகள், மடாதிபதிகள், ஆன்மிக அமைப்பினர் வந்து கோயிலை பார்வையிட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர். நம்ம மீனாட்சியம்மன் கோயிலுக்கு இப்படியாகிவிட்டதே என்று பக்தர்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். அதே நேரம், இதை வைத்து செய்யப்படும் அரசியலை பார்த்து அவர்கள் கொந்தளித்துள்ளார்கள்.சூடம் ஏற்றியதுதான் தீ விபத்துக்குக் காரணம் என்று இப்போதுவரை காவல்துறையால் சொல்லப்பட்டு வருகிறது.

முத்துக்குமார்     இந்த நிலையில் மீனாட்சியம்மன் கோயில் சம்பந்தமாக பல வழக்குகளை தாக்கல் செய்து பல்வேறு உத்தரவுகள் வர காரணமானவரும், தற்போது உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு போடுவதற்கு காரணமான வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் முத்துக்குமார், ''கோயிலின் பாதுகாப்பை பலப்படுத்த 2009 லயே மத்திய அரசு, தமிழக அரசிடம் வற்புறுத்தியது. ஆனால், அப்போதிருந்த அரசு கண்டுகொள்ளவில்லை. சட்டப்படி மீனாட்சியம்மன் கோயிலை தொல்லியல்துறையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை. கோயில் கடைகளில் எந்தெந்த பொருள்களை விற்க அனுமதி என்று நான் கேட்ட ஆர்.டி.ஏ க்கு, குங்குமம், பூஜைக்குத் தேவையான பொருள்கள் மட்டும்தான் விற்கப்படுகிறது என்று பதில் தந்தார்கள். ஆனால், பொம்மைகள், எலெக்ட்ரானிக் பொருள்கள் உட்பட எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் விற்க அனுமதித்துள்ளனர். 1997 ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், புராதனமான கோயிலின் சுற்றுச்சுவரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் எந்தக் கட்டுமானமும் இருக்கக் கூடாது என்று கூறப்பட்டது.

 

ஆனால், கோயிலை சுற்றிப் பாருங்கள் எவ்வளவு உயரத்துக்குக் கட்டடங்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம். இதுக்குக் காரணம் மாநகராட்சி நிர்வாகம், கடந்த இருபது வருடங்களாகப் பணம் வாங்கிக்கொண்டு வணிக ரீதியான கட்டடங்களை கட்ட அனுமதித்துள்ளார்கள். அப்போதே இது சம்பந்தமான வழக்கு தாக்கல் செய்தேன். அனைத்துக் கட்டடங்களையும் இடிக்கப் போவதுபோல் மாநகராட்சி அதிகாரிகள் ஃபிலிம் காட்டினார்கள். அதற்குப்பிறகு அவ்வளவுதான். இதுக்குக் காரணமான மாநகராட்சி அதிகாரிகள், அப்போது பொறுப்பிலிருந்த மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டுமல்ல, கோயிலில் உள்ள தங்கம், வைரம், வைடூரியம், மற்றும் வெள்ளி நகைகளின் மதிப்பையும், கோயிலுக்கு உள்ள நிலபுலங்கள், கட்டடங்கள் விவரங்களையும் கேட்டு 2016 ல் விண்ணப்பித்தேன். அதற்கு ஆவணமாகத் தராமல், இணை ஆணையாளர் அலுவலகத்தில் வந்து கோப்புகளைப் பார்த்துக்கொள்ளலாம் என்று பதில் தந்தார்கள். அப்போது நான் சென்றபோது, முறையாகக் காட்டவில்லை. தற்போது மீண்டும் அதன் விவரங்களைக் கேட்டுள்ளேன். தற்போது தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு உயர் நீதிமன்றம் முக்கியமான உத்தரவுகளை விட்டுள்ளது. இந்த வழக்கு மூலம் தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில் விவரங்களும் விசாரணைக்கு வரும்'' என்றார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘’மீனாட்சியம்மன் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான, தமிழரின் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. பொறியியல் தொழில்நுட்ப அறிவுடன் வடிவமைத்துள்ளனர். தினமும் ஏராளமான பக்தர்கள் வரும் இக்கோயிலுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக 2009 ம் ஆண்டு மத்திய உள்துறை அறிவித்துள்ளது. இருந்தும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. நானூறு ஆண்டு பழைமையான வீர வசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்றப்பட்ட கடைகளில் சூடம் ஏற்றியது காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீத்தடுப்பில் கோயில் ஊழியர்களுக்கு விழிப்புஉணர்வு பயிற்சி இல்லை. ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும், தீத்தடுப்பு கருவிகள் அதிக அளவு நிறுவ வேண்டும். எப்போதும் தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும்.  பழுதடைந்த மின் ஒயர்களை மாற்ற வேண்டும்,  பிளாஸ்டிக் பொருள்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், செல்போன்களை பக்தர்கள் கொண்டு செல்லக் கூடாது. தற்போது அரசு நியமித்திருக்கும் நிபுணர் குழு, கோயில் முழுவதையும் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். கோயிலைச் சுற்றி அமைந்துள்ள விதி மீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவைப்படும் பட்சத்தில் காசி விஸ்வநாதர் கோயில், தாஜ்மஹாலைப் போல மத்தியப் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த மத்திய அரசை, தமிழக அரசு கேட்க வேண்டும். தமிழகத்திலுள்ள புராதனக் கோயில்களின் பாதுகாப்பு அம்சங்களை தொல்லியல்துறையினருடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். இந்த உத்தரவுகளைச் செயல்படுத்தி அதன் அறிக்கையை மார்ச் 12 ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று தலைமைச்செயலாளர் உட்பட மாநகராட்சி கமிஷனர் வரை உயர் நீதி மன்ற கிளை  உத்தரவிட்டுள்ளது.

ட்ராபிக் ராமசாமி

மத்தியப் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு தேவை என்று டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வருகிறது. மதுரை வந்த டிராஃபிக் ராமசாமி,, ‘அதிகாரிகள், காவல்துறையினர் செல்போன் பயன்படுத்தும்போது, பொதுமக்களும் கோயிலுக்குள் செல்போனை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், இதுபற்றி உயர் நீதிமன்றத்தில் முறையிடுவேன்’’  என்றார்.

இதைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பொதுப்பணித்துறையில் ஓய்வுபெற்ற முதன்மைப்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் சேதமடைந்த பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். அதே கட்டமைப்பில் வசந்தராயர் மண்டபத்தை புனரமைக்க முடியுமா என்றும் ஆய்வு செய்கிறார்கள். கருங்கற்கள், சுண்ணாம்பு மற்றும் மூலிகைக்கலவையாலும், கட்டப்பட்ட வசந்தராயர் மண்டபத்தை,  அதே திடத்துடன் கட்ட முடியுமா, என்னதான் சிமென்ட்டால் கட்டினாலும் அதன் ஆயுள் ஐம்பது வருடங்கள்தாம் என்று பலரும் கருத்துகளைக் கூறி வருகிறார்கள். இனி இருக்கும் பகுதிகளையாவது கவனத்துடன் காப்பாற்ற வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்துள்ள பகுதிகளை ஒட்டியுள்ள மண்டபத்தின் கூரைகள் இடிந்து விழுந்து விடாத வகையில் இரும்பு கர்டர்கள் மூலம் முட்டுக்கொடுக்கப்பட்டு வருகிறது. காலி செய்த கடைக்காரர்களுக்கு விரைவில் கடைகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று கூறினாலும், அதில் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள் கடைக்காரர்கள். அது மட்டுமில்லாமல் புதுமண்டபத்திலுள்ள கடைகளும் காலி செய்யப்பட உள்ளதாகச் சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளாக இருக்கும் அதிலுள்ள புத்தகக் கடைகள், தையற் கடைக்காரர்கள் மிகவும் சோகத்துடன் இருக்கிறார்கள்.  

கோயில் நிர்வாகத்துக்கு 65 கேள்விகளைக்கொண்ட மனுவை அனுப்பி பதிலுக்குக் காத்திருக்கிறார் திமுக எம்.எல்.ஏ பிடிஆர் பழநிவேல்தியாகராஜன். இதுபோல பலரும் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மனுக்களை அனுப்பி கோயில் நிர்வாகத்தை திணறடித்து வருகிறார்கள். கடந்த 11 ம் தேதி இரவு கோயிலை பார்வையிட வந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘’கோயில் அதிகாரிகளுக்கு எந்த விவரமும் தெரியவில்லை, இவர்களை நம்பி இவ்வளவு பெரிய கோயிலை ஒப்படைத்திருக்கிறோம், தீவிபத்து என்ற கோணத்தில் மட்டும் பார்க்காமல், வேறு ஏதும் சதித்திட்டம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும், 110 விதியை அறிவிப்பதுபோல கோயிலை ஆறுமாதத்தில் சரி பண்ணி விடுவோம் என்று தமிழக அரசு சொல்கிறது ’’ என்று கோபமாகப்  பேசினார்.

  தினமும் பல்வேறு மடாதிபதிகள், ஆன்மிக ஆர்வலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து செல்கிறார்கள். யாரையும் சேதமான பகுதிகளைப் பார்க்க அனுமதிக்கவில்லை. இதற்கிடையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் செல்லும் என்று சொல்லப்பட்டு வருகிறது.

    

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்