வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (13/02/2018)

கடைசி தொடர்பு:19:07 (13/02/2018)

'என் தேவையை நிறைவேற்றியவர் கனகுதான்'  - எட்டுநாளும் காரில் சுற்றியதாக பினு வாக்குமூலம்

போலீஸிடம் சரண் அடைந்த பிரபல ரவுடி பினு

 சென்னை போலீஸாரிடம் சரணடைந்த பினுவிடமிருந்து அரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து மலையம்பாக்கம் கிராமத்தில் பணத்தை வழிப்பறி செய்த வழக்கிலும், கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பான வழக்கிலும் பினுவை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். 

 சென்னை மாங்காடு, மலையம்பாக்கம் கிராமத்தில் கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடி கெத்துக் காட்டிய பிரபல ரவுடி பினுவை போலீஸார் தேடி வந்தனர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்த பினுவின் கூட்டாளிகள் 72 பேரை ஒரே நாளில் போலீஸார் கைது செய்தனர். பினு மற்றும் அவரது கூட்டாளிகள் கனகு, விக்கி உள்பட சில ரவுடிகளை தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்தநிலையில் சென்னை அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் சர்வேஸ்வரனிடம் இன்று காலை பிரபல ரவுடி பினு சரணடைந்தார். அவரிடம் போலீஸார் துருவித் துருவி விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சரணடைந்த பினுவிடமிருந்து பிறந்த நாள் கொண்டாடியபோது கேக் வெட்ட பயன்படுத்திய அரிவாள் மற்றும் வழிப்பறி செய்ய பயன்படுத்திய கத்தி என இரண்டு ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 


 இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மாங்காடு மலையம்பாக்கம் கிராமத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினுவை கடந்த எட்டு தினங்களாக தீவிரமாகத் தேடினோம். அவரைச் சுட்டுப்பிடிக்கவும் திட்டமிட்டிருந்தோம். என்கவுன்டர் பயத்தில் பினு தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் போனில் பேசினார். பினு, சரணடைய தயாராக இருக்கிறார் எங்கு வர வேண்டும் என்று கேட்டார். உடனே அந்த போலீஸ் அதிகாரி, இந்தத் தகவலை சக போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தெரிவித்தார். 
சரணடைவதற்குள் பினுவை கைது செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. இதற்கிடையில் அம்பத்தூர் துணைக் கமிஷனர் அலுவலகத்துக்குப் பினு வந்து சரணடைந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரித்துவருகிறோம். பிறந்தநாள் கொண்டாடியபோது கேக்கை வெட்ட பயன்படுத்திய அரிவாள் மற்றும் அவரது இடுப்பில் வைத்திருக்கும் கத்தி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளோம். தலைமறைவாக இருந்த சமயத்தில் பினு எங்கு இருந்தார் என்ற கேட்டதற்கு திண்டிவனத்தில் உள்ள வழக்கறிஞர் வீட்டில் தலைமறைவாக இருந்ததாகத் தெரிவித்தார். 

பினு கூட்டாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

பிறந்தநாள் கொண்டாடி விட்டு மலையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கத்தியைக் காட்டி பினு பணம் பறித்துள்ளார். அந்தப் புகாரில் பினுவை கைது செய்யவுள்ளோம். மேலும், பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பாகவும் மாங்காடு போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளனர். இதற்கிடையில் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்கிலும் பினு மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது"என்றார். 

 போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "பினுவிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் அசராமல் பதிலளித்தார். அப்போது, தலைமறைவாக இருந்த இடம் குறித்து கேள்வி கேட்டோம். அதற்கு அவர், மலையம்பாக்கம் கிராமத்திலிருந்து தப்பிய பிறகு போலீஸுக்கு பயந்து காரில்தான் தமிழகம் முழுவதும் சுற்றினேன். குளிப்பதற்கு மட்டுமே காரை விட்டு கீழே இறங்குவேன். மற்றபடி காரில்தான் பயணித்தேன் என்று பதிலளித்துள்ளார். அடுத்து, பினுவுக்குத் தேவையான பணம் அவரது நெருங்கிய கூட்டாளியான கனகு ஏற்பாடு செய்துள்ளார். கடைசியாக பினு, காரில் வேளாங்கன்னியில் இருந்துள்ளார். என்கவுன்டர் பயம் ஏற்பட்ட பிறகுதான் பினுவுக்கு நெருக்கமானவர்கள் அவரை சரணடையச் சொல்லியுள்ளனர். அதன்படி பினு சரணடைந்துள்ளார். பினுவுக்கு உதவி செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். பினுவின் கூட்டாளிகள் குறித்த விவரங்களைச் சேகரித்துள்ளோம். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்"என்றனர். 

பினுவின் வீடியோ குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "பொது மக்களிடம் ரவுடி பினு குறித்த பயத்தை போக்குவதற்காகத்தான் அந்த வீடியோ வெளியிடப்பட்டது. மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டினால் பயப்படாமல் போலீஸிடம் புகார் கொடுங்கள். போலீஸ் மீது நம்பிக்கை வையுங்கள். என்றும் நாங்கள் பொதுமக்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருப்போம். பினுவின் உண்மையான நிலைதான் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. எனவே ரவுடிகளைக் கண்டு பொதுமக்கள் பயப்பட வேண்டாம்" என்றார். 

 


டிரெண்டிங் @ விகடன்