பொதுநல வழக்கு தாக்கல் செய்ய கட்டுப்பாடு! உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் அறிவிப்பு

பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்ய சில கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவித்துள்ளது. 

சமீபகாலமாகப் பொதுமக்கள் பாதிக்கப்படும் பிரசன்னைகளுக்கும், அரசாங்கத்தில் நடைபெறும் ஊழல்களையும், இயற்கை வளங்களை காக்கவும் பொதுநல வழக்குகள் மூலமே தீர்வு ஏற்பட்டு வருகிறது. இப்படி தாக்கல் செய்யப்படும் பொதுநல வழக்குகள் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், இயற்கையை சுரண்டுபவர்களுக்கும் எரிச்சலை உண்டாக்கி வருகிறது என்பது உண்மை.பல பொதுநல வழக்குகளில் நீதிமன்றங்கள் அதிரடியான உத்தரவுகளை விதித்து வருகிறது.

பொதுநல வழக்கு

இந்த நிலையில் இவ்வழக்குகளைத் தாக்கல் செய்பவர்களுக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை. அதில், ``இனிவரும் காலங்களில் இதுபோன்ற வழக்குகளைத் தாக்கல் செய்பவர்கள், அதற்கான மனுவில் தங்கள் சொந்த பிரச்னை சார்ந்தது இல்லை என்பதைத் தெரிவிக்க வேண்டும், அது பெருவாரியான மக்களின் பிரச்னையாக இருக்க வேண்டும். ஏற்கெனவே தள்ளுபடியான வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்யக் கூடாது. மனுதாரர் அந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுக்கள், அதன் பதில்களையும் இணைக்க வேண்டும். மனுதாரர் தன்னுடைய ஆதார், பான் கார்டு நகல்களை இணைக்க வேண்டும்.

பத்திரிகைச் செய்தி அடிப்படையில் தாக்கல் செய்யும் வழக்கில், அந்தச் செய்தி எழுதிய பத்திரிகை நிறுவனத்திடம் உறுதிப்படுத்தி ஆவணம் இணைக்க வேண்டும். அப்படி இல்லாமல் சுயநலத்தோடு, எந்த ஆதாராமுமில்லாமல் மனுத்தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்,  உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து எடுக்கும் வழக்குகளுக்கு இந்த விதிகள் பொருந்தாது" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளைப் பதிவாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார். 

நீதிமன்றப் பதிவாளர் அறிவித்துள்ள புதிய நிபந்தனைகள் இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்பவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்களால் சொல்லப்படுகிறது. ஒருசில வழக்குகள் தவிர பெரும்பாலான வழக்குகள் மக்கள் நலன் சார்ந்ததுதான் என்று சிலர் கூறி வருகிறார்கள். சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க, பொதுநல வழக்குகளே உதவி செய்தன என்றும் சொல்கிறார்கள்.

சமீபத்தில் மதுரையில் ஒரு கருத்தரங்கில் பேசிய உயர் நீதிமன்ற முன்னாள்  நீதிபதி அரிபரந்தாமன், "பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசை நீதித்துறை ஆளப் பார்க்கிறது என்று பிரதமர் மோடி டெல்லியில் நடந்த `சட்ட நாள் விழாவில் பேசியுள்ளார். இதன்மூலம் ஆட்சியாளர்கள், மக்களின் அடிப்படை உரிமையையும் நீதித்துறையின் உரிமையையும் பறிக்க நினைக்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தது கவனிக்கப்பட வேண்டியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!